புதுடெல்லி: குற்றப்பின்னணி கொண்ட எம்பி, எம்.எல்.ஏக்களின் கிரிமினல் வழக்கை அனைத்து மாநிலங்களில் இருக்கும் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி தலைமையில், சிறப்பு அமர்வு அமைத்து விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யா பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘அரசு மற்றும் நீதித்துறை பணிகளில் உள்ள ஒருவர் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் தொடர்ந்து பணியாற்ற அரசால் தடை விதிக்கப்படுகிறது. ஆனால் கிரிமினல் குற்ற வழக்கில் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுகிறபோது, தண்டனை காலம் முடிந்து 6 ஆண்டுகள் கடந்துவிட்டால் அவர்கள் மீண்டும் எம்.பி, எம்.எல்.ஏ மற்றும் அமைச்சராக கூட பதவி வகிக்க முடியும். எனவே, கிரிமினல் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல் வாதிகளுக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் முன்னதாக விசாரித்தபோது, தேர்தல் ஆணையம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. அதாவது தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து அதுசார்ந்த அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்னதாக மூன்று முறை விளம்பரப்படுத்த வேண்டும். மேலும் குற்ற வழக்கில் இருப்பவர்கள் தங்களது அனைத்து விவரங்களையும் மின்னணு, அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் இதனை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என கடந்த ஆண்டு தெரிவித்திருந்தது. அனைத்து விசாரணையும் முடிவடைந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில், ‘‘எம்பி, எம்.எல்.ஏக்கள் குற்றப்பின்னணி தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க பல காரணிகள் உள்ளன. அரசியல் சாசன பிரிவு 227ன் கீழ் உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்களின் மீது அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. மேலும் குற்றப்பின்னணி கொண்ட எம்பி, எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக தீர்ப்பதை உறுதிசெய்ய உயர் நீதிமன்றங்களிடம் விட்டு விசாரிக்க செய்வது தான் பொருத்தமானதாக இருக்கும்.
மேலும் இந்த விவகாரத்தை ஒவ்வொரு மாநிலங்களில் இருக்கும் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்த விவகாரத்தை உடனடியாக கவனத்தில் கொண்டு விசாரணைக்கு என்று ஒரு சிறப்பு அமர்வை அமைத்து எம்.பி. எம்.எல்.ஏக்கள் மீதான குற்றப்பின்னணி வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வழக்குகளை விசாரிக்கும் மாவட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் இந்த வழக்குகள் தொடர்பான ஆலோசனையை கேட்டு பெறலாம். இதில் அவர்களும் இந்த வழக்கு விசாரணைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
அதேப்போன்று இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம், மாவட்டம் வாரியாக எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள் தொடர்பான விவரங்களை ஒருங்கிணைந்த ஆன்லைன் தளங்களை உருவாக்கி அதில் முழு விவரங்களை பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக ஆயுள் தண்டனை, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை முன்னுரிமை கொடுத்து விரைந்து விசாரிக்க வேண்டும். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தால் மட்டும் தான் வழக்கை ஒத்திவைக்க வேண்டும்.
மேலும் விசாரணைக்காக தேவைப்படும் வழிகாட்டுதல்களையும், உள்கட்டமைப்புகளையும் உயர்நீதிமன்றங்கள் செய்து தர வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் தேவைப்படும் பட்சத்தில் அரசு தலைமை வழக்கறிஞர்கள், விசாரணை நடக்கும் நீதிமன்றங்களின் ஆலோசனைகளை கேட்டு பெறலாம். இதில் குற்றப்பின்னணி கொண்ட எம்பி, எம்.எல்.ஏக்களுக்கு ஆயுட்கால தடை வழங்கும் விவகாரம் தொடர்பான ஒரு கோரிக்கையை மட்டும் உச்ச நீதிமன்றத்தால் விரிவாக விசாரிக்கப்படும் என தீர்ப்பளித்து வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
* மாவட்டம் வாரியாக எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள் தொடர்பான விவரங்களை ஆன்லைனில் வெளியிட வேண்டும்.
* ஆயுள் தண்டனை, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை முன்னுரிமை கொடுத்து விரைந்து விசாரிக்க உத்தரவு.