* திருமண தகவல் மையங்களில் பொய்யான தகவல்களை தந்து மோசடி செய்வதால் பெண்கள்தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
* விவாகரத்து ஆனவர்கள், திருமண வயதை கடந்த பெண்கள்தான் இதுபோன்ற மோசடி பேர்வழிகளின் இலக்கு.
சென்னை: திருமண தகவல் மையங்களில் தவறான தகவல்களை தந்து மோசடி செய்வதால் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் திருமண தகவல் மையங்களின் இணையதளத்தை ஒழுங்குபடுத்த உரிய வழிமுறைகளை கொண்டு வரவேண்டும் என ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை கூறியுள்ளது. பொய் தகவல்களை பதிவு செய்து பெண் டாக்டர் ஒருவரை திருமணம் செய்வதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் பிரசன்னா என்ற சக்கரவர்த்தி முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில், மனுதாரர் தவறான தகவலை கிறிஸ்தவ திருமண மையத்தில் பதிவு செய்து பெண் டாக்டரான புகார்தாரரை ஏமாற்றியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட 41 வயது பெண் டாக்டர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கிறிஸ்தவ திருமண தகவல் இணையதளத்தில் தன்னை டாக்டர் என்று மனுதாரர் சக்கரவர்த்தி குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து, பெண்ணின் பெற்றோர் திருமணத்துக்காக அவரை தொடர்பு கொண்டனர். இதை தொடர்ந்து டாக்டரிடம் பேசி, பழகி 68 லட்ச ரூபாயை டாக்டர் பெயரில் வங்கியில் கடன் வாங்கியுள்ளார். 80 சவரன் தங்க நகைகளையும் அபகரித்து மோசடி செய்துள்ளார். திருமணமாகாத வயதான பெண்கள், பெண் டாக்டர்கள், நர்சுகள், விவாகரத்து ஆனவர்கள் ஆகியோரை குறிவைத்து மோசடி செய்வதுதான் இவரது வேலை. திருமண தகவல் மையத்தில் டாக்டர், இன்ஜினியர் என்று போலியான தகவலை தந்து அதை அந்த திருமண தகவல் இணையதளத்தில் பதிவு செய்து இதுவரை 17க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளார்.
எனவே, சக்கரவர்த்திக்கு முன்ஜாமீன் தரக் கூடாது என்று வாதிட்டு எதிர்ப்பு மனுவை தாக்கல் செய்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திருமண தகவல் இணையதளத்தில் தவறான விவரங்களை கொடுத்து மனுதாரர் பல பெண்களை ஏமாற்றியுள்ளதாக பெண் டாக்டர் புகார் அளித்துள்ளார். இதை பார்க்கும்போது திருமணம் மோசடி என்றாலே அதில் பெண்கள்தான் இரையாகின்றனர். முன்பு ஆன்லைனில் ஒரு பொருள் வாங்கினால் வாங்குபவர்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சட்டம் இருந்தது. ஆனால் இப்போது சட்டம் மாறிவிட்டது. விற்பனை செய்பவர்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மனுதாரர் சுமார் 17 பெண்களை இதேபோல் ஏமாற்றியுள்ளார். தன்னை டாக்டர், இன்ஜினியர் என்று கூறிக்கொண்டு பல பெண்களை ஏமாற்றுவதுதான் அவரது வாடிக்கையாக இருந்துள்ளது என்று புகார்தாரரான பெண் டாக்டர் தெரிவித்துள்ளார்.
திருமண தகவல் இணையதளத்தில் கட்டுப்படுத்த எந்த ஒரு சட்டமும் இதுவரை இல்லை. பாஸ்போர்ட், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன்தான் இணையதளத்தில் ஆணோ பெண்ணோ பதிவு செய்ய வேண்டும் என்று விதி இருந்தால், இதுபோன்ற மோசடிகள் நடக்காது. ஒருவேளை தவறான தகவல் கொடுத்து இருந்தாலும் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, திருமண தகவல் இணையதளத்தை ஒழுங்குபடுத்தவும் கட்டுப்படுத்தவும் உரிய சட்டங்களை ஒன்றிய, மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தி மனுதாரரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.