மதுரை: ஐகோர்ட் மதுரை கிளையில் நிர்வாக நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன், நீதிபதி மரியா கிளெட் ஆகியோர், நேற்று காலை வழக்கம்போல வழக்குகளை விசாரிக்கத் துவங்கினர். அப்ேபாது அதிமுக வழக்கறிஞர்கள் ஆஜராகி, ‘‘சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயிலில் பணியில் இருந்த காவலர் அஜித்குமார், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போது காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் 24 லாக்கப் மரணம் நிகழ்ந்துள்ளன’’ என நீதிபதிகளிடம் முறையீடு செய்தனர்.
அப்போது நீதிபதிகள், அரசு தரப்பு குற்றவியல் வழக்கறிஞரைப் பார்த்து, ‘‘24 லாக்கப் டெத் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தங்கள் தரப்பு விளக்கம் என்ன’’ என கேட்டனர். ெதாடர்ந்து, ‘‘அடித்துக் கொல்லப்பட்ட நபர் தீவிரவாதியா? அவரை தூக்கிட்டு போய் அடித்து கொலை செய்துள்ளீர்கள்? ஒரு சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை, இதுபோன்று தாக்குதல் நடத்தி உள்ளது ஏன்’’ என கேள்வி எழுப்பினர். அப்போது அரசு தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், வக்கீல்களிடம் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யுங்கள். நாளை (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக் கூறி, மனுவை இன்றைய வழக்கு விசாரணைக்கு பட்டியலிடுமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.