கொல்கத்தா: கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவ கல்லூரியில் நடந்த நிதி முறைகேடுகளை சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்த 31வயது பெண் கடந்த 9ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். மருத்துவ கல்லூரியின் கருத்தரங்கு அறையில் அவரது உடல் கிடந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் போலீசாருக்கு உதவி செய்ய நியமிக்கப்பட்ட தன்னார்வலர் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டுள்ளான். கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 13ம் தேதி இந்த வழக்கை சிபிஐ எடுத்து கொண்டது. இந்த வழக்கு தொடர்பாக சஞ்சய் ராயிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இதன் பின்னர் ஆர்ஜி கர் மருத்துவ கல்லுாரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. சந்தீப் கோஷ் முதல்வராக இருந்த போது மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடந்த நிதி முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.
சந்தீப் கோஷ் முதல்வராக இருந்த போது நிதி முறைகேட்டில் ஈடுபட்டார் என்றும் இது குறித்து அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என மருத்துவமனை கண்காணிப்பாளர் அக்தர் அலி புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து இந்த விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவிடம் இருந்து சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
* தாழ்ப்பாள் உடைந்தது எப்படி?
மருத்துவ மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட கருத்தரங்கு அறையில் உள்ள கதவின் தாழ்ப்பாள் உடைந்தது எப்படி என்பது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதுகுறித்து சிபிஐ அதிகாரி கூறுகையில்,‘‘ கருத்தரங்கு கூட அறைக்கதவில் உள்ள தாழ்ப்பாள் உடைந்து பல நாட்கள் ஆகி விட்டது என்று அங்கு பணிபுரியும் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், நர்சுகள் கூறினர்.இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணால் உள்ளே கதவின் உள்பக்கம் தாழ்ப்பாள் போடமுடியவில்லை. இதை பயன்படுத்தி குற்றவாளி எளிதில் உள்ளே புகுந்து உள்ளான். அவனுக்கு ஆதரவாக யாரோ செயல்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது’’ என்றார்.