சென்னை: இந்தியா முழுவதும் உயர் நீதிமன்றங்களில் 33 விழுக்காடு நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகங்களை சேர்ந்த வழக்கறிஞர்களுக்கு பிரதிநிதித்துவம், ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றம் ஆவின் கேட் அருகே வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வழக்கறிஞர்கள் ஆர்.சி.பால்கனகராஜ், எம்.வேல்முருகன், விஜயகுமார், கு.பாரதி, பார்வேந்தன், மில்டன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பட்டிலின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதுகுறித்து வழக்கறிஞர்கள் கூறும்போது, தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் 10க்கும் மேற்பட்ட நீதிபதிகள் இடங்கள் காலியாக உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதனால், தற்போது காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் அனைத்து பிரிவினருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.