புதுடெல்லி: நாடு முழுவதும் 25 உயர் நீதிமன்றங்கள் உள்ளன. இங்கு 1,114 நீதிபதிகளை நியமிக்க அனுமதி உண்டு. ஆனால் தற்போது 352 நீதிபதிகள் பணியிடம் நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ளன. நவம்பர் 1ம் தேதி கணக்குப்படி தென்மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள் காலிப்பணியிடம் வெறும் 4 சதவீதம்தான் உள்ளன. ஆனால் வடமாநிலங்களில் இந்த எண்ணிக்கை அதிகபட்சமாக 49 சதவீதமாக உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 75. அங்கு தற்போது 8 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளன. இது 11 சதவீதம். அதே போல் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 62. அங்கு காலியிடம் 12. இது 19 சதவீதம். கேரளாவில் அனுமதிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 47. அங்கு காலிபணியிடம் ெவறும் 2 தான். தெலங்கானாவில் மொத்தம் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 42. தற்போது அங்கு 32 நீதிபதிகள் உள்ளனர். காலி பணியிடம் 10.
அதே சமயம் நாட்டிலேயே அதிக நீதிபதிகள் எண்ணிக்கை கொண்ட அலகாபாத் உயர் நீதிமன்றம் 49 சதவீத காலி பணியிடத்தை கொண்டுள்ளது. அங்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 160. தற்போது அங்கு 81 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். இதுபோல் தான் நாட்டில் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் வடமாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் காலிப்பணியிடம் அதிகமாக உள்ளது. ஒடிசாவில் 42 சதவீதம்,கொல்கத்தா 40%, பஞ்சாப் மற்றும் அரியானா 38 சதவீதம், டெல்லி 38 சதவீதம், குஜராத்தில் 38%, மும்பையில் 27 சதவீதம் காலிப்பணியிடம் உள்ளது.
ஏன் இந்த மாறுபாடு என்று பார்த்தால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு உயர் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி ஓய்வு பெறுவதற்கு 6 மாதத்திற்கு முன்பு புதிய நீதிபதி தேர்வுக்காக கொலிஜியத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். தென்மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்கள் இந்த பட்டியலை மிகச்சரியாக கடைபிடித்து அனுப்பி வைத்து காலி பணியிடங்களை குறைத்துள்ளன. ஆனால் வட மாநில உயர் நீதிமன்றங்கள் இதில் அதிக அக்கறை காட்டுவதில்லை என்ற புகார் உள்ளது. மேலும் வடமாநிலங்களில் நீதிபதி பணியை விட, வக்கீல் பணியை அதிகம் பேர் விரும்புவதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்கள் எண்ணிக்கை 25
* மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 1,114.
* மொத்த நீதிபதிகள் காலியிடம் 352.