Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் நிர்வாகம் தொடர்பான நோட்டீசை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் கட்டளைகளுக்கு சொந்தமான சொத்துக்களை முறையாக நிர்வாகிக்காது குறித்து விளக்கம் கேட்டு வேலக்குறிச்சி மடாதிபதிக்கு அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் பணிகளை மேற்கொள்ள 13 கட்டளைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அபிஷேக கட்டளை மற்றும் அன்னதான கட்டளைகளுக்கு வேல குறிச்சி படாதிபதி சத்திய ஞான மகாதேவர் தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பரம்பரை அறங்காவலராக இருந்து வருகிறார். கடந்த 1937ம் ஆண்டு இந்த இரு கட்டளைகளுக்கும் சொந்தமாக 3,900 ஏக்கர் நிலங்கள் இருந்த நிலையில் தற்போது 1300 ஏக்கர் நிலங்கள் மட்டுமே உள்ளன.

இதனால் கட்டளைகளுக்கு சொந்தமான நிலங்களை முறையாக பராமரிக்கவில்லை எனக் கூறி இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி வேலகுறிச்சி மடாதிபதி குரு மகா சந்நிதானத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி கோவிலின் மடாதிபதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அறநிலையத்தறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன், கோவில் செயல் அலுவலர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.கே.ராம் ஆஜராகினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, கோவில் சொத்துக்கள் நிர்வகித்தல் குறித்து விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசில் எந்த காரணங்களும் குறிப்பிடப்படவில்லை என்ற மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அறநிலையத்துறை நோட்டீசுக்கு நான்கு வாரங்களில் மனுதாரர் பதில் அளிக்க வேண்டும். அந்த விளக்கத்தை பரிசீலித்து அவர்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க அவகாசம் வழங்கி சட்டப்படி இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.