களக்காடு: களக்காடு நகராட்சிக்குள்பட்ட சிதம்பரபுரத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கும், வெளியூர்களுக்கு செல்லவும் களக்காட்டிற்கு தான் வரவேண்டும். சிதம்பரபுரத்தை சேர்ந்த பலர் களக்காட்டில் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதுபோல களக்காட்டில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் அப்பகுதி மாணவ-மாணவிகளும் களக்காட்டில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். களக்காடு-சிதம்பரபுரம் இடையே நாங்குநேரியான் கால்வாய் (கவுதம நதி) ஓடுகிறது. இந்த கால்வாயின் மீதுள்ள தரைப்பாலத்தை கடந்து தான் சிதம்பரபுரம் பொதுமக்கள் களக்காட்டிற்கு வரவேண்டும். களக்காடு-சிதம்பரபுரத்தை இணைக்கும் முக்கிய பாலமாக இந்த பாலம் திகழ்கிறது.
இந்த தரைப்பாலம் கடந்த 1975ம் ஆண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. பாலம் கட்டப்பட்டு 45 ஆண்டுகளை கடந்து விட்டதால் பாலம் மிகவும் பழுதடைந்துள்ளது. பாலத்தின் தடுப்பு தூண்கள் இடிந்து, சிதிலமடைந்துள்ளது. இதனால் கரணம் தப்பினால் மரணம் என்பது போலத் தான் போக்குவரத்து நடந்து வருகிறது. மழைக்காலங்களில் நாங்குநேரியான் கால்வாயில் தண்ணீர் அதிகளவில் வரும் போது தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி விடுகிறது. பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் அடைப்பு ஏற்படுவதும் இதற்கு ஒரு காரணமாகும். பாலத்தின் மீது காட்டாற்று வெள்ளம் ஓடும் போதெல்லாம் சிதம்பரபுரம் கிராமம் துண்டிக்கப்பட்டு தனிதீவாக மாறி விடுகிறது. பொதுமக்கள் சிதம்பரபுரத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அத்துடன் உயிரிழப்புகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த மழையின் காரணமாக வழக்கம் போல் பாலத்தை மூழ்கடித்தப்படி வெள்ளம் பாய்ந்தோடியது. அப்போது பாலத்தை கடக்க முயன்ற கர்ப்பிணி ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, உயிரிழந்துள்ளார். அப்போது கிராம மக்கள் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டி போராட்டங்கள் நடத்தினர். ஆனால் பாலம் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி சிதம்பரபுரம் தரை பாலத்தை அகற்றிவிட்டு புதிதாக உயர்மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.