பழநி: உயர்நீதிமன்ற உத்தரவின் காரணமாக பழநி மலைக்கோயிலில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக கோயிலில் செல்போன் ரேக் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலின் மூலவர் சிலை அரியவகை நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது பழநி மலைக்கோயிலில் செல்போன், கேமராக்கள் மூலம் படம்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஆர்வமிகுதியால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிலர் மூலவரை செல்போன் மூலம் படம் பிடிப்பதுடன், அவற்றை வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் உலவ விடுகின்றனர். இது ஆகமவிதிகளுக்கு முரணாக அமைந்து விடுகிறது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பக்தர் ஒருவர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்விற்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘ஏன் செல்போன் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்தவில்லை’’ எனக்கூறி கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
இதன்காரணமாக தற்போது பழநி மலைக்கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன்படி அடிவாரம் படிப்பாதை, வின்ச், ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் கொண்டு வரும் செல்போன்களை வாங்கிக் கொண்டு டோக்கன் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக படிப்பாதை, வின்ச், ரோப்கார் நிலையங்கள் அருகில் உள்ள கோயில் கட்டிடம் உள்ளிட்ட இடங்களில் தனி ரேக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் இவ்வழிமுறை நடைமுறைப்படுத்தப்படுமென தெரிகிறது. இம்முறையை அமல்படுத்தினால் பக்தர்களின் அவசர தொடர்புக்கு வசதியாக மலைக்கோயிலில் அதிக அளவிலான போன் பூத்கள் அமைக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.