புதுடெல்லி: அதிக மகசூல், பருவநிலையைத் தாக்குப்பிடிக்கும் மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் புதிய பயிர் ரகங்களை அவர் வெளியிட்டார். 109 ரகங்களில் 34 வயல் பயிர்கள் மற்றும் 27 தோட்டக்கலை பயிர்கள் அடங்கும். இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
அப்போது, வேளாண்மையில் மதிப்புக் கூட்டுதலின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து விவாதித்த பிரதமர், மக்கள் எவ்வாறு சத்தான உணவை நோக்கி நகர்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டினார். இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்தும், இயற்கை விவசாயத்தின் மீது சாமானிய மக்களின் நம்பிக்கை அதிகரித்து வருவது குறித்தும் பேசினார்.