*விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை
கூடலூர் : கூடலூர் வனக்கோட்டம் சார்பில் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் கூடலூர் கோட்ட வன அலுவலர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமை வகித்தார்.
வனச்சரகர்கள், வனவர்கள் முன்னிலை வகித்தனர். தேவர்சோலை பேரூராட்சி 11 ம் வார்டு கவுன்சிலர் ஹனிபா, பாடந்துறை உழவர் உற்பத்தியாளர் குழு செயலாளர் ரகுநாதன் மற்றும் கூடலூர் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பாடந்துறை கிராம சுற்றுவட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக உலா வரும் மக்னா யானையை முதுமலை முகாமிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடந்துறை நகரம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் வராமல் தடுக்க கண்காணிப்பு கேமரா மற்றும் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.
மேலும் முதுமலை புலிகள் காப்பக மறு குடியமர்வு திட்டத்தின் கீழ் அய்யன் கொல்லி பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தேவையான சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமைப்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பாடந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளால் யானை உள்ளிட்ட வன உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதால் அவற்றை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் காட்டு யானைகள் வருவதை தடுக்க கடசன கொல்லி முதல் உட்பிரேயர் வரை அகழி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
தொடர்ந்து, பாடந்துறை பகுதியில் காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்கள் மற்றும் யானைகள் தாக்கி இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் இழப்பீட்டு தொகை வழங்கிய வனத்துறைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.