குணா: ‘பல்பு’ ஹோல்டரில் ரகசிய கேமாரவை பொருத்தி தொழிலதிபர்களை வலையில் சிக்கவைத்து ஆபாச வீடியோ எடுத்த பெண், பாஜக நிர்வாகி, அந்தப் பெண்ணின் கணவர் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலம் குணா நகரில் வசிக்கும் ஜவுளி தொழிலதிபரான தீபக் ஜெயின் என்பவரிடம் சமூக ஊடகம் மூலம் ெபண் ஒருவர் அறிமுகமானார். தனது சகோதரனை போல் அந்தப் பெண் தீபக் ஜெயினிடம் பழகி வந்தார்.
சில நாட்களுக்கு பின் அவசர தேவைக்காக தீபக் ஜெயினிடம் ரூ.5500 கடன் வாங்கினார். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் வாங்கிய கடனை திருப்பி தரவில்லை. அந்தப் பெண்ணை போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, தனது வீட்டிற்கு வந்து வாங்கிச் செல்லுமாறு கூறினார். அதனை நம்பிய தீபக் ஜெயின், அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றார். அப்போது தீபக் ஜெயினுக்கு வழங்கிய டீ-யில் போதைப்பொருளை கலந்து அந்தப் பெண் கொடுத்தார். அதனை வாங்கிக் குடித்த தீபக் ஜெயின், அடுத்த சில நிமிடங்களில் மயங்கினார். சுயநினைவற்ற நிலையில் கிடந்த அவரை வைத்து, அவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோவை எடுத்தார்.
மயக்க நிலையில் இருந்த தீபக் ஜெயின், சுயநினைவு திரும்பியவுடன் தனது வீட்டிற்கு திரும்பினார். அடுத்த சில நாட்களில் அந்தப் பெண்ணுடன் இருக்கும் ஆபாச வீடியோவை, தீபக் ஜெயினுக்கு அவரது நண்பர் ஒருவர் அனுப்பியுள்ளார். அதிர்ச்சியடைந்த தீபக் ஜெயின், இவ்விவகாரம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘வாங்கிய கடனை திருப்பி தருவதாக கூறி, அந்தப் பெண் அவரது வீட்டிற்கு அழைத்தார். டீயில் போதை மருத்தை கலந்து கொடுத்து ஆபாச வீடியோ எடுத்துள்ளார். இதுகுறித்து கேட்டதற்கு, 3 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினார். மேலும், பணம் தராவிட்டால் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் கூறினார். அவமானமாக இருக்கும் என்பதால், இதுகுறித்து வெளியே சொல்லவில்லை. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளதால் போலீசில் புகார் அளித்தேன்’ என்றார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ராகேஷ் குமார் சாகர் கூறுகையில்:
குற்றம் சாட்டப்பட்ட பெண்ணும், அவரது கணவர் தேவேந்திர ஜடானும் சேர்ந்த இந்த பாலியல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பாலியல் மோசடியின் தலைவனாக உள்ளூர் பாஜக தலைவர் ராம் சோனி என்பவர் இருப்பதும் தெரியவந்தது. அந்த பெண்ணை பயன்படுத்தி, பல தொழிலதிபர்களை பாலியல் வலையில் சிக்க வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. தற்போது இவ்வழக்கில் தொடர்புடை பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். வீட்டு பல்பின் ஹோல்டரில் மறைத்து வைக்கப்பட்ட கேமராவை ெகாண்டு, ஆபாச வீடியோக்களை பதிவு செய்துள்ளனர். அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்து ஆபாசமான டிவிடிகள், கேமராக்கள், மடிக்கணினிகள், பிற உபகரணங்கள் மீட்கப்பட்டன’ என்றார்.