தமிழ்நாட்டில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன. முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் ஆதாரமே இந்த பாரம்பரிய நெல் ரகங்கள்தான். நெல்லின் தன்மையையும், வளரும் விதத்தையும் பொருத்து நெல் வகைகள் பிரிக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு நெல்லும் நம் உடலுக்கு அவை கொடுக்கும் சக்தியைக்கொண்டும், அவை விளையும் நிலத்தைக் கொண்டும் பெயர்பெற்றன. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக மெல்ல மெல்ல உலகம் முழுதும் புழக்கத்துக்கு வந்த பல லட்சக்கணக்கான நெல் ரகங்களும் கொத்துக் கொத்தாய் அழிந்துகொண்டிருக்கின்றன. அமோக விளைச்சல், அதிக லாபம் என்ற பேராசையைக் காட்டி நவீன விவசாயம் விவசாயிகளையும் நிலத்தையும் சூறையாடிக்கொண்டிருக்கிறது. பாரம்பரியமான நெல் ரகங்களை மீட்பது, இயற்கை விவசாயத்துக்குத் திரும்புவது என்பதுதான் இதற்கான சரியான மாற்றாக இருக்க முடியும்.
நிலத்தையும் உடலையும் காக்கும் அப்படியான பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்றுதான் குறுவைக் களஞ்சியம். இதன் மகசூல் எப்படி இருக்கும் என்று இதன் பெயரே சொல்கிறது. குறுவைப் பயிர்களிலேயே மிக அதிகமாகப் பெருகுவதால்தான் இதற்கு குறுவைக் களஞ்சியம் என்ற பெயர் வந்திருக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகப் பிரதானமாக விளையும் அற்புதமான நெல் ரகம் இது. பொய்க்காத பருவமழைக் காலத்தில் ஒரு ஏக்கருக்கு இரண்டாயிரம் கிலோ மகசூல் கொடுக்கக்கூடியது. மேலும், இதிலிருந்து ஏக்கருக்கு ஒரு டன் வரை வைக்கோலும் கிடைக்கும். குறுகியக்கால பயிரான குறுவைக் களஞ்சியம் 110 நாட்களில் அறுவடைக்குத் தயாராகும். செப்டம்பர் மாதம் தொடங்கும் பின் சம்பா பருவத்தில் அதாவது ஆவணியில் விதைத்து தை மாதத்தில் அறுவடை செய்யலாம். தமிழகம் முழுதுமே இந்தப் பருவத்தில் சாகுபடி செய்ய மிகவும் ஏற்ற ரகம் இது. குறுவைக் களஞ்சியத்தை ஒற்றை நாற்று முறையிலும், நேரடி விதைப்பு முறையிலும் பயிரிடலாம். நேரடி விதைப்பு என்றால் ஏக்கருக்கு 40 கிலோ வரை விதை நெல் தேவைப்படும். ஒற்றை நாற்று முறையில் விதை நேர்த்தி செய்து, பாத்தி அமைத்து, அதே காலத்தில் நடவு வயலைத் தேர்வு செய்து மேம்படுத்தி, உரிய காலத்தில் ஊட்டச்சத்து கொடுத்து இயற்கை உரங்கள் இட்டு, இயற்கையான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி, களை எடுத்து காய்ச்சலும் பாய்ச்சலுமாய் நீர் வார்த்து வந்தால் பொன்னாய் பெருகும் குறுவைக் களஞ்சியம்.
சொரசொரப்பான கடினமான நெல் வகையைச் சேர்ந்த இதன் நார்ச்சத்து செரிமானத்தைக் காக்கும். உடலுக்கு வலுவைத் தரும். சமைக்கப்பட்ட சோறு இரண்டு நாட்களுக்குப் பிறகும் மிகுந்த ருசியுடன் இருக்கும் என்பதால் இதில் பழையது வைத்துக் குடிக்கலாம். கடின உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் ஏற்றது. நீர் தாகத்தைப் போக்கும். உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். உடனடி ஆற்றலைக் கொடுப்பதால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. தற்போது உணவில் கலக்கப்படும் ரசாயனங்களால் நோயும், ஆயுட் குறைவும் ஏற்பட்டு வருகிறது. குறுவைக்களஞ்சியம், கருப்புக்கவுனி, தூயமல்லி, பெருங்காறு போன்ற பாரம்பரிய அரிசிகளை உண்பதால் உடலுக்குத் தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இதன்மூலம் நோயைத் தடுக்கலாம்.
குறுவைக் களஞ்சியம் நெல்லை அரிசியாக்கி சோறு சமைத்தால் 2 நாட்களுக்குப் பிறகும் ருசியாக இருக்கும். பழைய சோறு சாப்பிட விரும்புகிறவர்களுக்கு குறுவைக் களஞ்சியம் கன கச்சிதம்.
வேளாண்மைக்கு வந்தனம்!
விவசாயத்தை இந்தியாவின் முதுகெலும்பு என மகாத்மா காந்தி குறிப்பிட்டார். அத்தகைய விவசாயத்தை வளர்த்தெடுக்க விவசாயம் சாராத ஏராளமானோர் தங்களால் ஆன பங்களிப்பைச் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் ேசர்ந்த ஆர்.சங்கர் என்பவர் விவசாய வளர்ச்சிக்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காகவும் சில முன்னெடுப்புகளில் ஈடுபட்டு வருகிறார்.தனது வீட்டில் இருந்தபடியே சிறிய அளவில் பரிசுப்பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும். அதில் இருந்து கிடைத்து வரும் சிறிய அளவிலான வருமானத்தைக் கொண்டு பல்வேறு பணிகளைச் செய்து வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் விவசாயிகளின் குறைகேட்பு கூட்டம், விவசாயிகளின் ஆலோசனைக்கூட்டம் போன்றவற்றில் கலந்துகொண்டு அவர்களோடு துணைநிற்கிறார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வலியுறுத்தி தேனியில் இருந்து பொள்ளாச்சி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஹரியானா முதல் டெல்லி வரை விவசாயிகள் மேற்கொண்ட நடைப்பயணத்தில் பங்குபெற்றிருக்கிறார். இந்தப் பகுதியில் மரம் நடுவிழா, விதைத்திருவிழா போன்றவற்றிலும் பங்களிப்பு செய்து வருகிறார்.
தனது விவசாயம் சார்ந்த நடவடிக்கைகள் குறித்து சங்கர் தெரிவிக்கையில், “ எனக்கு விவசாயத் தொழிலுடன் நேரடித் தொடர்பு இல்லை. ஓய்வு நேரத்தில் நூலகம் செல்லும்போது விவசாயம் குறித்தும், விவசாயிகளின் பிரச்னைகள் குறித்தும் படித்தேன். நாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தொழிலை மேம்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் நம்மாலான பணிகளைச் செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன். அதன்படி என்னால் முடிந்த பணிகளைச் செய்து வருகிறேன். எங்கள் மாவட்டத்திலோ, அருகில் உள்ள மாவட்டங்களிலோ விவசாயம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடந்தால் சென்றுவிடுவேன். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மரக்கன்றுகள், விதைப்பந்துகள் வழங்கி வருகிறேன். அவர்களுக்கு விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்’’ என்கிறார்.