சண்டிகர்: பஞ்சாபின் அமிர்தசரசில் சர்வதேச எல்லையில் நேற்று முன்தினம் இரவு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து டிரோன் ஒன்று வந்தது. பைனி ராஜ்புதானா கிராமம் அருகே டிரோனை கண்டறிந்த வீரர்கள் அதன் மீது துப்பாக்கி சூடு நடத்தி சுட்டு வீழ்த்தினார்கள். தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் சேதமடைந்த நிலையில் டிரோன் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் டார்ன்டரன் மாவட்டத்தில் வான் கிராமம் அருகே பாகிஸ்தான் டிரோன் ஒன்று இந்திய பிராந்தியத்திற்குள் நுழைந்துள்ளது. இதனை வீரர்கள் இடைமறித்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் மர்மநபர் பைக்கில் அங்கு வந்துள்ளார். வீரர்களை பார்த்தவுடன் அந்த நபர் தப்பி சென்றார். சம்பந்தப்பட்ட பகுதியில் டிரோனில் இருந்து வீசப்பட்ட 2கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.