பெண்கள் விரும்பும் பொருட்களில் மிக முக்கியமான ஒன்று என்றால் அதில் மருதாணியும் அடக்கம். அதுவும் நமது பாட்டி காலம் முதல் தற்போது இருக்கும் குட்டீஸ் வரை அனைவருக்கும் விருப்பமான ஒன்று. வீட்டில் பண்டிகை, கல்யாணம், திருவிழா என்றால், முதலில் கைகளை மருதாணி கொண்டு அலங்கரித்துக் கொள்வார்கள் பெண்கள். இப்போது அப்படி எல்லாம் இல்லை. விரும்பும் நேரத்தில் கைகளில் மருதாணி இட்டுக் கொள்கிறார்கள்.
மருதாணி வைத்தால் உஷ்ணம் குறையும், திருமணமாகும் பெண்களின் கையில் சிவக்கும் மருதாணியின் நிறத்தை வைத்து அவரின் வருங்கால கணவர் தன் மீது கொண்டுள்ள காதலை கணிப்பார்கள், மன அழுத்தத்தை குறைக்கவும், வயதானவர்கள் தலைமுடியின் நரையினை மறைக்க என பல காரணங்களுக்கு மருதாணியை பயன்படுத்துகிறார்கள். மருதாணியை பெண்கள் மட்டுமில்லை, ஆண்களும் பயன்படுத்துகிறார்கள்.
அதே சமயம் கடைகளில் ரசாயனம் கலக்கப்பட்டு விற்கப்படும் மருதாணியினை பயன்படுத்தினால் எந்தப் பயனும் கிடையாது. இயற்கையான மருதாணி இலையினை பயன்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு யாருக்கும் பொறுமை இல்லை என்பது தான் உண்மை. பல மருத்துவ குணங்கள் கொண்ட இதனை இயற்கையான முறையில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் மெஹந்தி ஸ்டுடியோவினை நிர்வகித்து வருகிறார்கள் ஃபாத்திமா பீவி என்கிற ஃபேபி மற்றும் முகமது கலீமுல்லா யாக்கோப் தம்பதியினர். இது இந்தியாவின் முதல் மெஹந்தி ஸ்டுடியோ என்ற பெருமைக்குரியது.
‘‘நான் கல்லூரியில் படிக்கும் போது இருந்தே சின்னச் சின்ன மெஹந்தி போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றிருக்கேன். கிட்டதட்ட 18 வருடங்களா நான் மெஹந்தி போட்டு வருகிறேன். ஆரம்பத்தில் பகுதி நேரமாதான் இதை செய்தேன். ஆனால் என் அப்பாவுடைய இறப்பிற்கு மெஹந்தி போடுவதையே என் முழு நேர வேலையா மாற்றிக் கொண்டேன். நாங்க கடைகளில் கிடைக்கும் கோன்களை பயன்படுத்துவதில்லை.
நாங்களே தயாரிப்பதால், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. நான் ஆரம்பத்தில் கைகளில் மருதாணி மட்டும் தான் போட்டுக் கொண்டிருந்தேன். என் கணவர்தான் மருதாணியினால் கைகளை மட்டும் அழகுபடுத்தலாம் என்றில்லை, அதை பலவிதமான முறைகளில் பயன்படுத்தலாம் என்றார். அதனைத் தொடர்ந்து தான் நாங்க ‘யாஃபா ஹென்னா’ என்ற பெயரில் மெஹந்தி ஸ்டுடியோவை ஆரம்பிச்சோம்’’ என்றவரை தொடர்ந்தார் அவரின் கணவர் கலீம்.
‘‘நான் சாஃப்ட்வேர் துறையில் வேலை பார்த்து வந்தேன். நான் சின்ன வயசிலிருந்தே தலைமுடி, உடல் ஆரோக்கியம் மேல் தனிப்பட்ட கவனம் செலுத்துவேன். இப்போது தலை முடி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு பல ரசாயனம் கலக்கப்பட்ட பொருட்கள் மார்க்கெட்டில் உள்ளன. அதைத்தான் மக்களும் பயன்படுத்துகிறார்கள். அதன் விளைவு அவர்களின் தலைமுடியில் பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. ஆனால் அவர்களுக்கு தாங்கள் பயன்படுத்தும் பொருட்களால் தான் இந்த விளைவு என்று தெரிவதில்லை.
இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றால் இயற்கை சார்ந்த பொருட்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும். அதை எப்படி கொடுக்கலாம்னு யோசிச்சேன். ஏற்கனவே என் மனைவி மருதாணி தயாரித்து, மெஹந்தி போடுவதை பிசினசா செய்து வராங்க. அதே மருதாணியை கொண்டு ஏன் முயற்சி செய்யக் கூடாதுன்னு தோன்றியது. மருதாணி வைத்து கைக்கு மெஹந்தி மட்டும்தான் போட முடியும் என்றில்லை. தலை முடி முதல் கால் நகம் வரைக்கும் பலவிதங்களில் இயற்கையான முறையில் மருதாணியை பயன்படுத்தலாம். அதற்காக ஐந்து வருடம் ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். அதன் மூலம் மருதாணியை எந்தெந்த வகையில் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கலாம்னு தெரிந்து கொண்டேன்.
ஹென்னா ஹேர் வாஷ், ஹென்னா ஹேர் ஆயில், ஹென்னா ஹேர் கண்டிஷனர் மற்றும் ஹென்னா ஹேர் கலர் என மருதாணியில் பல விதமான ஆரோக்கியமான பொருட்களை அறிமுகம் செய்தோம். இது முழுக்க முழுக்க மருதாணி கொண்டு மட்டுமே இயற்கையான முறையில் தயாரிக்கிறோம். எந்த வித ரசாயனங்களும் பயன்படுத்துவதில்லை. அதனால் குறைந்த அளவேதான் தயாரிப்போம். காரணம், இதனை ஸ்டாக் செய்தால் அதில் உள்ள இயற்கை தன்மையை இழக்க நேரிடும்.
அதனால் ஸ்டாக் தீர தீரத்தான் தயாரிப்போம். பொதுவா நமக்கு ஏற்படும் நரை முடியை கலர் செய்வதற்காகத் தான் மருதாணியை பயன்படுத்து வாங்க. அவ்வாறு பயன்படுத்தும் போதும் தலைமுடி வெளிர் பிரவுன் நிறத்திற்கு மாறும். இந்த நிறம் பலருக்கும் பிடிப்பதில்லை. மருதாணியில் எதனை சேர்த்தால் கருப்பு நிறம் வரும், மேலும் அப்படி சேர்க்கும் பொருள் முற்றிலும் இயற்கையானதாக இருக்க வேண்டும். எனவே கருப்பு நிறத்தை கொண்டு வர ஜாகுவா என்னும் பூவின் விதையினையும் சேர்த்து கருமை நிறம் கொண்டு வந்தோம். இந்த ஜாகுவா விதை அமெரிக்காவில் தான் விளைகிறது.
அதனால் அங்கிருந்துதான் அதனை இறக்குமதி செய்கிறோம். 1 லிட்டர் ஹென்னா ஹேர் ஆயில் தயாரிக்க குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது தேவைப்படும்’’ என்றவர் தன் ஸ்டியோ அமைப்பினை பற்றி விவரித்தார்.‘‘ஸ்டுடியோ அமைக்கும் ேபாது நானும் என் கணவரும் இது மற்ற சலூன் அல்லது அழகு நிலையம் மாதிரி இருக்கக் கூடாது என்பதில் ரொம்பவே கவனமா இருந்தோம்’’ என்றார் ஃபேபி. ‘‘இங்கு வருபவர்கள் குறைந்த பட்சம் மூன்று மணி நேரமாவது செலவிட நேரும் என்பதால், அவர்களின் மனதிற்கு அமைதியான சூழலை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே செடிகள் மற்றும் எங்களின் இன்டீரியரை டிசைன் ெசய்திருக்கிறோம்.
மேலும் மருதாணிதான் எங்களின் மூலப் பொருள் என்பதால், எங்க சொந்த ஊரில் மருதாணி தோட்டம் அமைத்து, பராமரித்து வருகிறோம். அதைக் கொண்டுதான் எங்க ஸ்டுடியோவில் அனைத்து பொருட்களும் தயாரிக்கப்படுகிறது. இங்கு மருதாணி விளைச்சல் குறையும் போது ஹரியானாவில் மருதாணிக்காக மிகவும் பெயர் போன குருகிராம் என்னும் இடத்திலிருந்து நேரடியாக கொள்முதல் செய்து கொள்வோம்’’ என்றவர் மருதாணியினை பயன்படுத்தும் முறைப் பற்றி விளக்கினார்.
‘‘இங்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இருக்கும் ஒரே பிரச்னை நேரம் தான். மருதாணி இலை பறித்து அரைத்து, கைகளில் வைத்து அது காய கிட்டத்தட்ட 4-5 மணி நேரம் செலவிடுவோம். சிலர் இரவில் வைத்து காலை வரை கைகளில் உலர விடுவார்கள். ஆனால் இங்கு அரைத்த மருதாணியை குறைந்த பட்சம் 3 அல்லது 4 மணி நேரமாவது வைக்க வேண்டும். அதுவும் கல்யாண பெண்களுக்கு வைக்கும் மருதாணி அதிகபட்சமாக எட்டு மணி நேரம் வைத்தால் மட்டுமே மருதாணி நிறத்தின் காலம் நீட்டிக்கும். மேலும் கைகளில் வைக்கும் மருதாணியின் நிறம் வைத்துக் கொள்பவர்களின் உடல் வெப்பத்தை பொறுத்து வேறுபடும்.
சிலருக்கு ஆரஞ்சு நிறத்திலும், சிலருக்கு சிவப்பு மற்றும் அடர் சிவப்பு நிறத்திலும் மேலும் சிலருக்கு கருப்பு நிறத்திலும் வேறுபட்டு காணப்படும். தலைமுடிகளுக்கு பயன்படுத்தும் போது, மூன்று மணி நேரம் கழித்துதான் தலையை அலச வேண்டும். ஆரம்பத்தில் மருதாணி போடுவது குறித்து பயிற்சி அளித்து வந்தோம். கொரோனா காலத்தில் ஆன்லைனில் எடுத்தோம். சிறப்பாக டிசைன் போடுபவர்களுக்கு பரிசுடன் சான்றிதழும், மற்றவர்களுக்கு மெடலுடன் சான்றிதழும் கொடுத்தோம். அவர்கள் டிசைன் போட்டு பழக பல வழிமுறைகள் ஏற்படுத்தி கொடுத்தோம்.
அதில் ஒரு வகை தான் ப்ளேட்டுகளில் மருதாணி டிசைன் போடுவது. தற்போது நான் பயிற்சி அளிப்பதில்லை. ஒரு சிலர் எங்களிடம் தான் பயிற்சி எடுக்க வேண்டும் என்று வருவார்கள். அவர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கிறோம். எங்களிடம் பயிற்சி பெற்றவர்கள் பலர் சொந்தமாக இதனை தொழிலாக செய்து வருகிறார்கள். ஒரு சிலர் எங்க ஸ்டுடியோவிலேயே வேலை பார்க்கிறார்கள். எல்லாரும் மருதாணி போடுகிறார்கள். அதில் நாங்க வித்தியாசப் படணும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான், thematic mehandi. அவர்கள் வாழ்க்கையில் நடந்த இனிப்பான விஷயங்களை மருதாணி மூலம் அவர்களுக்கு நினைவு படுத்துவதுதான் இந்த தீமாட்டிக் மெஹந்தி. மணப்பெண்கள் தங்கள் துணையினை சந்தித்த நாள், இடம், மறக்கமுடியாத தருணம் ஆகியவற்றை மெஹந்தி மூலம் வரைய சொல்வார்கள்’’ என்றார் ஃபேபி.
‘‘மருதாணி கைகளில் மட்டுமில்லாமல், நகங்கள் மற்றும் டெம்ப்ரவரி டாட்டூ என சொல்லப்படும் கறுப்பு நிறத்தை கொடுக்கும் மருதாணியையும் போடுகிறோம். எங்களின் வாடிக்கையாளர்கள் ெபரும்பாலும் வெளிநாட்டினர்தான். அவர்கள் சென்னைக்கு வரும் போது நம்முடைய கலாச்சாரமான மருதாணியை கையில் போட்டுக் கொள்ள மிகவும் விரும்புகிறார்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் தாங்கள் சிகிச்சைக்கு செல்லும் முன் மருதாணி வைத்துக் கொள்ள வருகிறார்கள்.
அந்த சமயம் மனதிற்கு ஒரு வித பாரமாக இருந்தாலும், அவர்கள் முகத்தில் எங்களால் சந்தோஷத்தினை கொண்டு வர முடிகிறது என்று நினைக்கும் போது மனசுக்கு நிறைவாக இருக்கும். தற்போது ஷாம்பு, ஹேர் கலர் போன்ற பொருட்கள் மட்டுமில்லாமல், இதனைக் கொண்டு வேறு என்ன தயாரிக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்’’ என்றனர் இந்த மெஹந்தி தம்பதியினர்.
தொகுப்பு: காயத்ரி காமராஜ்