கரூர் மாவட்டம் வாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மனோகர். ஐதராபாத்தில் மென்பொறியாளராக பணியாற்றிய இவர், தற்போது தனது சொந்த கிராமத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இதில் நல்ல லாபமும் பார்த்து வருகிறார். இயற்கை எழில் சூழ்ந்த தனது பண்ணையில் தூய பெருவிடை நாட்டுக்கோழிகளுக்கு வேப்பஎண்ணெய் கலந்த சாதத்தை தீவனமாக கொடுத்துக் கொண்டிருந்த மனோகரைச் சந்தித்தோம்…“ கரூர்தான் எங்களுக்கு சொந்த ஊர். எம்எஸ்சி ஐ.டி படித்துவிட்டு, ஐதராபாத்தில் மென்பொறியாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். கொரோனா காலகட்டத்தில் சொந்த கிராமமான வாங்கலுக்கு திரும்பி வந்தேன். இங்கிருந்தே வொர்க் பிரம் ஹோம் முறையில் வேலை பார்த்தேன். ஒருகட்டத்தில் இந்த முறையிலான பணி வெறுப்பாத் தோன்றியது. பூர்வீகமாகவே விவசாய குடும்பம் என்பதால் கால்நடை வளர்ப்பில் எனக்கு ஆர்வம் அதிகம். வீட்டில் இருக்கிறோம், என்ன செய்யலாம்? என்று யோசித்தபோது, நாட்டுக்கோழிப்பண்ணை வைக்கலாம் என்று தோன்றியது.
முதல்கட்டமாக மூன்று பெருவிடை பெட்டைக்கோழியும், ஒரு சேவலும் வாங்கி வந்து வளர்க்க ஆரம்பித்தேன். பெருவிடையில் வெத்தடி, கத்திக்கட்டு என பல வகைகள் உள்ளது. இந்த வெத்தடியில் ஜாவா, தும்மர், யாகுத்து, சீதா, பீலா என்று பல ரகங்கள் இருக்கும். ஆனால் என்னிடம் உள்ளது தூய பெருவிடை கத்திக்கட்டுதான். இந்த வகை கோழிகள் கரூரில் ரொம்பவும் பேமஸ். ஒரு தொழில் தொடங்குவதற்கு ஆர்வம் இருந்தால் மட்டும் இருந்தா போதாது. அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்கிற திட்டமிடல் அவசியம். இதை மனதில் வைத்து, கோழிப்பண்ணை வளர்ப்பைப் பற்றி முறையாக தெரிந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். கிராமத்தில் உள்ள பெரியவர்கள் பல காலமாக நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களிடம் நேரடியாக சென்று கோழி வளர்ப்பு பற்றி தெரிந்துகொண்டேன். அதையும் இயற்கையாக விளைந்த தானியம், இயற்கை மருந்து கொடுத்து கோழிகளை வளர்ப்பது பற்றி அறிந்து கொண்டேன்.
இப்போது 2 ஏக்கர் நிலத்தில் கோழிகள் மட்டுமே வளர்த்து வருகிறேன். இதற்காக 18×140 என்ற அளவில் கொட்டகை தயார் செய்தேன். இதனை அடைக்கோழி, ஜோடிக்கோழிகள், ஒரு வார கோழிக்குஞ்சுகள், வளர்ந்த கோழிகள், குஞ்சுகளுடன் மேய்ச்சலில் இருக்கும் பெட்டைக்கோழி என 5 வகைகளாக பிரித்து வைத்திருக்கிறேன். இப்போது 120 பெட்டைக்கோழிகள், 18 சேவல்கள் உள்ளன. இதிலிருந்து மாதம் எனக்கு கிட்டதட்ட 400 கோழிக்குஞ்சுகள் கிடைக்கிறது’’ என தன்னைப்பற்றியும், கோழி வளர்ப்புக்கு வந்த கதையையும் கூறிய மனோகர் கோழிகளை பராமரிக்கும் முறைகள் குறித்து விளக்கினார். பராமரிப்பு மற்றும் நோய் மேலாண்மை “கோழிகளைப் பொருத்தவரையில் பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமானது. காலநிலையைப் பொருத்து உணவு கொடுப்பது, தண்ணீர் வைப்பது, உரிய நேரத்தில் மேய்ச்சலில் விடுவது போன்றவற்றை முறையாக கவனிக்க வேண்டும். காலையில் 6 மணிக்கு கோழிகளை மேய்ச்சலுக்கு திறந்துவிடுவோம். அதன்பிறகு 11 மணியளவில் கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை, அரிசி என கோழிகளுக்கு தீவனமாக கொடுப்போம். பிறகு மதிய நேரத்தில் ஆடாதொடா, முருங்கைக்கீரை, கொத்தமல்லி, அழுகிய தக்காளி போன்றவற்றைக் கொடுப்போம். மாலையில் கொட்டகையில் அடைய வரும் கோழிகள் சரியான அளவில் தீவனம் எடுத்திருக்கிறதா? என்பதை கவனித்துக் கொள்வேன். அதேபோல் காலையில் கோழிகளை மேய்ச்சலுக்கு திறந்துவிட்ட பின்பு கொட்டகையை சுத்தம் செய்துவிடுவேன்.
பண்ணையைச் சுற்றிலும் மூலிகைச்செடிகள் இருப்பதால் கோழிகளுக்கு பெரும்பாலும் நோய்த்தாக்கம் ஏற்படுவதில்லை. காலை மாலை என இருவேளைகளும் சுத்தம் செய்த கிண்ணத்தில் கோழிகளுக்கு தண்ணீர் வைப்பேன். நாளொன்றுக்கு மஞ்சள், கீழாநெல்லி, குப்பைமேனித்தழை, வெற்றிலை, கற்பூரவள்ளி, வேப்பங்கொழுந்து போன்றவற்றை அரைத்து தண்ணீரோடு கலந்து வைப்பேன். இதனால் கோழிகளுக்கு நல்ல எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இதுபோக வாரம் ஒருமுறை கோழிகளுக்கு வெள்ளை சாதத்தில் வேப்பஎண்ணெயை கலந்து கொடுப்பேன். இவ்வாறு கொடுக்கும்போது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வேப்ப எண்ணெய்யை தானியத்தோடு ஊற வைத்துக் கொடுப்பது நல்லது. இது கோழிகளின் இரைப்பையை சுத்தம் செய்யும். இதன்மூலமும் கோழிகளை நோயில் இருந்து காக்கலாம். மழைக்காலத்தில் கோழிகளுக்கு நோய் வராமல் தடுக்க நன்கு ஆற வைத்த சுடுதண்ணீர் மட்டுமே கொடுக்கிறேன். மேலும் மாதம் ஒருமுறை 10 மில்லி ஈ.எம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கோழிகளுக்கு கொடுக்கிறேன். இந்த மருந்து கொடுப்பதன் மூலம் கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சராசரியாக ஒரு பெருவிடைக்கோழி 12 லிருந்து 15 முட்டைகள் இடும். அனைத்து முட்டைகளையும் அடை வைத்துதான் பொறிக்க வைக்கிறேன். முட்டைகளை பொறிக்க வைக்க நான் ஒருபோதும் இன்குபேட்டர்களைப் பயன்படுத்துவது இல்லை. அடை வைத்த 21வது நாளில் கோழிக்குஞ்சுகள் முட்டையில் இருந்து வெளியே வந்துவிடும். 22வது நாளில் ஒவ்வொரு முட்டையாக எடுத்து தட்டிப்பார்ப்பேன். கரு கூடி இருந்தால் முட்டைக்குள் இருக்கும் கோழிக்குஞ்சின் சத்தம் கேட்கும். முட்டை ஓடு மிகவும் அடர்த்தியாக இருந்தால் கோழிக்குஞ்சுகள் வெளியே வர சிரமப்படும். இந்த நேரத்தில் மெதுவாக முட்டை ஓட்டை விலக்கி நானே கோழிக்குஞ்சினை வெளியில் எடுத்து விடுவேன். இப்படியாக கிடைத்த கோழிக்குஞ்சுகளை ஒரு வாரம் வரை தாய்க்கோழியுடன் விட்டு பராமரிப்பேன். இந்தப்பகுதியில் மீன்வலையை 6 அடி உயரத்திற்கு கட்டி வைத்திருக்கிறேன். இதனால் கோழிகளை பருந்து, காகம், கழுகு போன்றவை இரைக்காக தூக்க முடியாது.
ஒரு வாரம் மற்றும் இரண்டு வாரம் வயதுடைய கோழிக்குஞ்சுகளை விற்பனை செய்துவிடுவேன். ஒருவார கோழிக்குஞ்சுகளை தரத்தைப் பொருத்து ரூ.150 வரை விற்பனை செய்வேன். கோழிப்பண்ணை துவங்கிய சிறிது காலம் வரை முட்டைகளை விற்பனை செய்து வந்தேன். ஆனால் எனக்கு அதில் பெரிய லாபம் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் தற்போது கோழிக்குஞ்சுகளாக விற்பனை செய்து வருகிறேன். கோழிகளுக்கு அடை வைத்திருந்த கொட்டகையில் ஒரு மாதத்திற்கு முன்பு பெருச்சாளி, பாம்புகள் தாக்கியதால் 10க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துவிட்டன. இதனால் கோழிகளை பாதுகாக்க பண்ணையைச் சுற்றி முழுதாக மீன்வலை அமைக்க ஏற்பாடு செய்கிறோம். எனது பண்ணையில் மாதம் 250 லிருந்து 350 கோழிக்குஞ்சுகள் வரை கிடைக்கிறது. இதில் சராசரியாக மாதம் 300 கோழிக்குஞ்சுகளை விற்பனை செய்கிறேன். ஒரு கோழிக்குஞ்சு சராசரியாக ரூ.130க்கு விற்பனை செய்கிறேன். இதன்மூலம் மாதம் ரூ.39 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. இதில் செலவுகள் அதிகபட்சமாக ரூ.9 ஆயிரம் போக ரூ.30 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது. கோழிக்குஞ்சுகளை கரூர், நாமக்கல்லை சேர்ந்த வாடிக்கையாளர்கள் நேரடியாக வந்து வாங்கி செல்கிறார்கள். இதுபோக சேலம், ஈரோடு, கோவை, திண்டுக்கல், மதுரை, தேனி, கம்பம், ராஜபாளையத்தை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு பார்சல் மூலம் கோழிக்குஞ்சுகளை அனுப்பி வைக்கிறேன்.மேலும் கோழிகளை இறைச்சிக்காவும் விற்பனை செய்கிறேன். இதில் வாரம் 30 கிலோ வரை கோழிகள் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.500 என்ற கணக்கில் விற்பனை செய்கிறேன். சராசரியாக 12 கோழிகள் வரை விற்பனையாகும். ஒரு கோழி 2 கிலோ இருக்கும். இதனால் ரூ.12 ஆயிரம் கிடைக்கிறது. தற்போது பாதிக்கு பாதி கோழிக்குஞ்சுகளை நிறுத்தி வைத்து முழு கோழியாக விற்பனை செய்யத் தொடங்கி இருக்கிறேன். இதில் இன்னும் கூடுதலான லாபம் கிடைக்கும்’’
என்கிறார் மனோகர்.
தொடர்புக்கு:
மனோகர்: 90524 77793.