சென்னை: ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் விசாரிக்க கேரள உயர் நீதிமன்றத்தில் பெண் நீதிபதி உள்பட 5 நீதிபதிகளை கொண்ட விசால அமர்வு அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கையால் மலையாள சினிமா உலகில் ஏற்பட்ட புயல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. பாலியல் புகார் கூறப்படும் நடிகர்கள் மற்றும் சினிமா துறையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஹேமா கமிட்டி அறிக்கை வெளிவருவதற்கு முன் அறிக்கையை வெளியிட தடை விதிக்கக் கோரி மலையாள சினிமா தயாரிப்பாளரான சஜிமோன் என்பவர் உயர் மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், அறிக்கையை வெளியிட்டால் மலையாள சினிமாவைச் சேர்ந்த பலருக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பின்னர், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறி நவாஸ் என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். மேலும் ஹேமா கமிட்டி அரசிடம் அளித்த முழு அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் மனுவில் தெரிவித்திருந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) முகம்மது முஷ்டாக், மனு ஆகியோர் அடங்கிய அமர்வு, வரும் 9ம் தேதிக்குள் முழு அறிக்கையையும் தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவிட்டது.
இதற்கிடையே இந்த அறிக்கையில் கூறப்பட்ட தகவல்கள் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று ஒரு மனுவும், வழக்கு பதிவு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி வேறு ஒரு மனுவும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இவை உள்பட அனைத்து மனுக்களையும் விசாரிப்பதற்காக 5 நீதிபதிகளை கொண்ட ஒரு விசால அமர்வை அமைக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) முகம்மது முஷ்டாக் உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய அமர்வில் ஒரு பெண் நீதிபதியும் இருப்பார். வரும் 10ம் தேதி முதல் அனைத்து மனுக்களையும் இந்த புதிய அமர்வுதான் விசாரிக்கும். ஹேமா கமிட்டி அறிக்கையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு கேரள உயர் நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
* நடிகர் ஜெயசூர்யா மீது பாலியல் புகார் கூறிய நடிகை சோனியா பாஜவில் சேர்ந்தார்
நடிகர் ஜெயசூர்யா மீது பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை சோனியா மல்ஹார். இவர் பாஜவில் சேர்ந்துள்ளார். திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பாஜ உறுப்பினருக்கான அட்டையை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜ மாநில தலைவர் சுரேந்திரன், முன்னாள் ஒன்றிய இணையமைச்சர் வி. முரளீதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* பாலியல் விவகாரங்களில் ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள்: நடிகை பிரியாமணி பேட்டி
ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகைகள் அளிக்கும் பாலியல் புகார்கள் குறித்து பிரியாமணி கூறியது: ஹேமா கமிட்டி போன்ற ஒரு குழு அமைக்கப்பட்டது மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்கள் தண்டனைக்கு உள்ளாக வேண்டும். இந்த விஷயத்தில் பலரும் தங்களது கசப்பான அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். இதற்கு தனி தைரியம் வேண்டும். மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இதுபோன்ற ஒரு கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.
திரையுலகில் மட்டுமில்லாமல் மற்ற துறைகளிலும் பெண்கள் இதுபோன்ற பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறார்கள். இந்த விஷயத்தில் சிலர் ஆதாரம் கேட்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன் நடந்ததை இப்போது ஆதாரத்துடன் சொல்வது கடினம். ஆனால் இப்போது கேமரா போன்கள் அதிகமாக உள்ளது. அதனால் இத்தகைய ஆதாரங்களை மேற்கொள்வது எளிதானது. இந்த விஷயத்தில் பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களும் வாய் திறக்க வேண்டும். எனக்கு இதுவரை இதுபோன்ற அனுபவம் ஏற்படவில்லை. இவ்வாறு பிரியாமணி கூறினார்.
* மலையாள சினிமாவுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது: சொல்கிறார் மஞ்சு வாரியர்
கேரள திரைத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து மம்மூட்டி, பஹத் பாசில், ஜெயராம் உள்பட பல முன்னணி நடிகர்கள் வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்க மறுத்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர், நடிகர் டொவினோ தாமஸ் ஆகியோர் கோழிக்கோடு அருகே உள்ள தாமரைசேரியில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது நடிகை மஞ்சு வாரியர் பேசியது: மலையாள சினிமா தான் நானும், டொவினோவும் இங்கு வந்து நிற்பதற்கு காரணமாகும். மலையாள சினிமாவுக்கு தற்போது ஏற்பட்டு உள்ள சில சிக்கல்கள் குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியும். மலையாள சினிமா சற்று ஒரு பிரச்னையான காலகட்டத்தில் இப்போது சென்று கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னைகள் அனைத்தும் விரைவில் தீரும். ரசிகர்களாகிய உங்களுடைய ஆதரவும், அன்பும் இருக்கும் வரை எனக்கோ, மலையாள சினிமாவுக்கோ எந்த ஆபத்தும் ஏற்படாது. இவ்வாறு அவர் பேசினார்.
* கேரள டிஜிபியிடம் நடிகர் நிவின் பாலி புகார்
மலையாள இளம் நடிகர் நிவின் பாலி உள்பட 5 பேர் துபாயில் ஓட்டலில் பூட்டிப் போட்டு 3 நாள் தன்னை கூட்டு பலாத்காரம் செய்ததாக எர்ணாகுளம் அருகேயுள்ள நேரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக எர்ணாகுளம் ஊன்னுகல் போலீசார் நடிகர் நிவின் பாலி, தயாரிப்பாளர் சுனில் உள்பட 5 பேர் மீது கூட்டு பலாத்கார வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நடிகர் நிவின் பாலி கேரள டிஜிபி ஷேக் தர்வேஷ் சாகிப்புக்கு இமெயிலில் நேற்று ஒரு புகார் அனுப்பியுள்ளார். அதில், என் மீது புகார் கொடுத்த இளம்பெண் யார் என்றே எனக்கு தெரியாது. இது பொய்யான வழக்கு. இந்த விவகாரம் தொடர்பாக எனது விளக்கத்தையும் சிறப்பு விசாரணைக் குழு கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பலாத்காரம் நடந்ததாக இளம்பெண் கூறிய நாட்களில் நிவின் பாலி ஷூட்டிங்கில் இருந்தார்: 2 டைரக்டர்கள் தகவல்
பிரபல மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலி மீது எர்ணாகுளத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் அளித்த புகாரில் கூட்டு பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது. துபாயில் ஒரு ஓட்டலில் வைத்து கடந்த வருடம் டிசம்பர் 14 முதல் 16ம் தேதி வரை 3 நாட்கள் தன்னை அடைத்து வைத்து நிவின் பாலி உள்பட 5 பேர் பலாத்காரம் செய்ததாக அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அந்த தேதிகளில் நிவின் பாலி தங்களுடன் படப்பிடிப்பில் இருந்ததாக பிரபல நடிகரும், டைரக்டருமான வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் டைரக்டர் அருண் ஆகியோர் கூறியுள்ளனர்.
வினீத் ஸ்ரீனிவாசன் கூறியது: கடந்த வருடம் டிசம்பர் 14ம் தேதி வர்ஷங்களுக்கு சேஷம் என்ற படத்தின் படப்பிடிப்புக்காக கொச்சி திருப்பூணித்துராவில் நிவின் பாலி எங்களுடன் இருந்தார். அங்குள்ள ஒரு மாலில் தான் அன்று முழுவதும் படப்பிடிப்பு நடந்தது. இதற்கான ஆதாரங்கள் உள்ளன. மறுநாள் அவர் ஒரு வெப் தொடரில் நடிக்க சென்று விட்டார்.
டைரக்டர் அருண் கூறியது: கடந்த வருடம் டிசம்பர் 15, 16 தேதிகளில் நான் இயக்கிய ஒரு வெப் தொடருக்கான படப்பிடிப்பில் நிவின் பாலி கலந்து கொண்டார். இதற்கும் ஆதாரங்கள் உள்ளன.
* நடிகர்கள் முகேஷ், இடைவேளை பாபுவுக்கு முன்ஜாமீன்
பிரபல மலையாள நடிகரும், சிபிஎம் எம்எல்ஏவுமான முகேஷ், நடிகர் இடைவேளை பாபு மீது கொச்சியை சேர்ந்த ஒரு நடிகை பாலியல் புகார் கூறியிருந்தார். கொச்சி போலீசார் இவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதை தொடர்ந்து இருவரும் முன்ஜாமீன் கோரி எர்ணாகுளம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இருவரையும் காவலில் விசாரிக்க இருப்பதால் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போலீசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி ஹனி எம்.வர்கீஸ், நடிகர்கள் முகேஷ், எம்எல்ஏ மற்றும் இடைவேளை பாபுக்கு முன்ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டார். திரைப்படக் கொள்கை உருவாக்கக் குழுவிலிருந்து முகேஷ் நீக்கம்: கேரள அரசு சார்பில் சமீபத்தில் திரைப்படக் கொள்கை உருவாக்க குழு அமைக்கப்பட்டது. இதில் நடிகர் முகேஷும் உறுப்பினராக இருந்தார். இந்நிலையில் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சினிமா கொள்கை உருவாக்கக் குழுவில் இருந்து நேற்று முகேஷ் அதிரடியாக நீக்கப்பட்டார்.