திருவனந்தபுரம்: ஹேமா கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் பிரபலங்கள் மீது பாலியல் புகார்கள் அதிகரித்து வருவதால் மலையாள சினிமா உலகம் நெருக்கடியில் சிக்கியுள்ளது. மலையாள சினிமாவைச் சேர்ந்த நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டியில் பழம்பெரும் நடிகை சாரதா மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வல்சலா ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.
இந்தக் கமிட்டி 60க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட நடிகைகள், பெண் கலைஞர்கள் மற்றும் நடிகர்களிடம் விசாரணை நடத்தியது. படங்களில் நடிக்க வந்தபோது அனுபவித்த கொடுமைகள் குறித்து அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் இந்தக் கமிட்டி அறிக்கை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் 4 வருடங்களுக்கு மேலாக இந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டின் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்த அறிக்கை வெளியானது.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புகார் கூறப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் உள்பட எந்த விவரங்களும் இடம்பெறவில்லை. இந்த அறிக்கை வெளியானதற்கு பின்னர் பல நடிகைகள் தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தற்போது வெளிப்படையாக கூறி வருகின்றனர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஸ்ரீலேகா மித்ரா என்ற நடிகை பிரபல டைரக்டரும், மலையாள சினிமா அகாடமி தலைவருமான ரஞ்சித் மீது பரபரப்பு புகார் கூறினார்.
மம்மூட்டி நடித்த பாலேரி மாணிக்கம் என்ற படத்தில் நடிக்க வந்தபோது தன்னிடம் டைரக்டர் ரஞ்சித் அத்துமீறினார் என்று அவர் புகார் கூறியுள்ளார். கதை சொல்லும் சாக்கில் அறையில் வைத்து தன்னுடைய உடலில் தொட்டதாகவும், அதிர்ச்சியடைந்து தான் உடனடியாக அந்த அறையை விட்டு வெளியேறியதாகவும் அவர் கூறினார்.இதன்பின் அந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என்றும், தன்னுடைய பணத்தில் விமான டிக்கெட் எடுத்து ஊருக்கு திரும்பி விட்டதாகவும் ஸ்ரீலேகா மித்ரா கூறினார்.
இவரது இந்தக் குற்றச்சாட்டு மலையாள சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து டைரக்டர் ரஞ்சித் சினிமா அகாடமி தலைவர் பொறுப்பை விட்டு விலக வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது. இதேபோல ரேவதி சம்பத் என்ற நடிகை, நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். தான் பிளஸ் டூ முடித்த நேரத்தில் தன்னை அணுகிய நடிகர் சித்திக், சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி அப்போது பலாத்காரம் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதே போல ஜூபிதா என்ற ஒரு ஜூனியர் நடிகை, நடிகர் சுதீஷ் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக புகார் கூறியுள்ளார். மோகன்லாலுடன் திரிஷ்யம் படத்தில் நடித்த நடிகை ஹன்சிபா ஹசனும் தன்னிடம் பலர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களது பெயர், விவரங்களை வெளியிட விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். மலையாள சினிமா பிரபலங்கள் மீது அடுத்தடுத்து குவியும் இந்த பாலியல் புகார்களால் மலையாள சினிமா உலகம் கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.