திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே முதன் முதலாக மலையாள சினிமா உலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணைக் கமிஷன் அறிக்கையை நீதிபதி ஹேமா 2019ம் ஆண்டே கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கினார். இந்நிலையில் பல தடைகளை மீறி தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டின் பேரில் ஹேமா விசாரணை கமிஷன் அறிக்கை நேற்று முன்தினம் வெளியானது.
இதில் தனிநபர் உரிமையை பாதிக்கும் வகையில் உள்ள பாகங்களையும், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களையும் வெளியிட வேண்டாம் என்று தகவல் உரிமை ஆணையம் கேட்டுக் கொண்டதால் அந்த பாகங்களை தவிர்த்து அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் மொத்தம் 296 பக்கங்கள் உள்ளன. ஆனால் பல பாகங்கள் நீக்கப்பட்டு 233 பக்கங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. இது தவிர பாதிக்கப்பட்ட நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் தாக்கல் செய்த வீடியோ ஆதாரங்கள் மற்றும் பென் டிரைவ்களில் இருந்த விவரங்கள் அடங்கிய மேலும் 400 பக்கங்கள் கொண்ட அறிக்கை உள்ளது.
ஆனால் அவை எதுவுமே வெளியிடப்படவில்லை. தற்போது வெளியாகியுள்ள விசாரணை கமிஷன் அறிக்கையில் முக்கிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் ஆகியோர் நடிகைகளை எப்படி கொடுமைப்படுத்தினார்கள்,அத்துமீறினார்கள் என்பது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அவர்கள் யார், யார் என்பது குறித்த இந்த தகவலும் இதில் இடம்பெறவில்லை. நீக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் அரசின் கைவசம் உள்ளது. அதில் அனைவரின் விவரங்கள் தகுந்த ஆதாரங்களுடன் உள்ளன.
* ஒரு சூப்பர் ஸ்டார் என்னிடம் மோசமாக நடந்து கொண்டார் மறைந்த பிரபல மலையாள நடிகர் திலகனின் மகள் சோனியா திலகன் கூறியது: கடந்த 2010ம் ஆண்டு முதல் என்னுடைய தந்தை திலகன் மலையாள சினிமாவில் நடக்கும் மோசமான சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக கூற தொடங்கினார். மலையாள சினிமா 15 பேர் அடங்கிய ஒரு மாபியா கும்பலின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று அப்போதே அவர் கூறினார். அதை இப்போது ஹேமா கமிஷன் உறுதி செய்துள்ளது.
மலையாள சினிமாவில் நடக்கும் அட்டூழியங்கள் குறித்து வெளிப்படையாக கூறியதால் தான் என்னுடைய தந்தையை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கி அவருக்கு சினிமா, டிவியில்ில் நடிக்கவும் தடை விதித்தார்கள். என்னுடைய தந்தை இறந்த பின்னர் ஒரு மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் என்னை போனில் தொடர்பு கொண்டார். திலகனுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக தான் வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்.
மேலும் சில முக்கிய விவரங்களை தெரிவிக்க வேண்டி இருப்பதால் தன்னுடைய அறைக்கு வருமாறு கூறினார். நான் அதற்கு மறுக்கவே போனில் சில ஆபாச தகவல்களையும் அவர் அனுப்பினார். அப்போதுதான் அவர் எதற்காக அறைக்கு அழைத்தார் என்பது எனக்கு புரிந்தது. அந்த சூப்பர் ஸ்டார் நடிகர் யார் என்பதை நேரம் வரும்போது கூறுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.