Saturday, February 24, 2024
Home » நீளும் உதவிக்கரம்

நீளும் உதவிக்கரம்

by Ranjith

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. அதைத்தொடர்ந்து வந்த பலத்த மழையாலும், நிரம்பி வழிந்த ஏரியாலும், சென்னையின் பல்வேறு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கட்கிழமை இரவு வரை, கிட்டத்தட்ட 24 மணி நேரத்தில், 73 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. 3 மாதங்களில் பெய்யக்கூடிய மழை ஒரே நாளில், வரலாற்றில் கேள்விப்படாத வகையில் பெய்து, சென்னை மக்களை நிலை குலைய வைத்துள்ளது. மழை நின்று 40 மணி நேரத்தை கடந்தும், இன்றும் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

பெருநகரின் பல பகுதிகள் தனித்தனி தீவுபோல் காட்சி அளிக்கின்றன. உண்ண உணவு, குடிக்க தண்ணீர் இல்லாத நிலை. மின்சாரம், தொலைதொடர்பு என எந்த சேவையும் இன்றி மக்கள் தவிக்கின்றனர். இன்று 5-வது நாளாக பல இடங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. செல்போன்களில் சிக்னல் கிடைக்காத காரணத்தால், யாருடனும் தொடர்புகொள்ள முடியாத நிலை. தலைநகர் சென்னையில், கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை பேரழிவை தொடர்ந்து, தற்போது இரண்டாவது பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளது. இது, 100 ஆண்டுகளில் இல்லாத அளவு ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை பேரழிவு ஆகும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த இரு தினங்களாக, களத்தில் இறங்கி, மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து சென்னையை மீட்டெடுக்க ஒன்றிய அரசு ரூ.5060 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் எதிரொலியாக, ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சென்னை வந்து, ஹெலிகாப்டர் மூலம் மழை பாதிப்பு பகுதிகளை நேரில் ஆய்வு செய்துள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ள, ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்துக்காக ரூ.561.29 கோடி ஒதுக்கியுள்ளது. இவை, யானைப் பசிக்கு சோளப்பொறி போல் உள்ளது. எனவே, ஒன்றிய அரசை எதிர்பாராமல், மக்கள் மனமுவந்து உதவிக்கரம் நீட்ட வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை ஏற்று, தமிழகத்தில், ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் நிவாரண பொருட்கள் லாரி, லாரியாக சென்னைையை நோக்கி பயணித்தவண்ணம் உள்ளன.

கடைசியாக உருவாக்கப்பட்ட தமிழகத்தின் 38-வது மாவட்டமான, மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்தும் நிவாரண பொருட்கள் லாரிகளில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உதவிக்கரம் நீட்டுவதில் தமிழர்கள் சளைத்தவர்கள் அல்ல, என்பதை தமிழக மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். ஏற்கனவே, 2008ல் நிஷா புயல், 2010ல் ஜல் புயல், 2011-ல் தானே புயல், 2012ல் நீலம் புயல், 2013ல் மடி புயல், 2016-ல் வர்தா புயல், 2017-ல் ஒக்கி புயல், 2018-ல் கஜா புயல் என தமிழத்தை புரட்டிப்போட்ட பல புயல்களின்போதும், நிவாரணம் வழங்க தமிழக மக்கள் தவறியது இல்லை.

அதுபோல் தற்போதும் மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தில் சிக்கிய சென்னை மக்களை மீட்க, உதவிக்கரம் நீட்டி வருவது பெரும் மகிழ்வை தருகிறது. ஒன்றிய அரசின் நிவாரண நிதி வருகிறதோ இல்லையோ, தமிழகத்தின் மூலை முடுக்கில் இருந்தெல்லாம் மக்கள் உதவ துவங்கியுள்ளனர். இது, சென்னை மக்களுக்கு பெரும் ஆறுதலாக உள்ளது. இந்த உதவிக்கரம் இன்னும் நீண்டால், சென்னை மிக விரைவில் மீளும் என்பதில் சந்தேகம் இல்லை.

You may also like

Leave a Comment

2 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi