அகமதாபாத்: தலை பெரிதாக உள்ள ஒருவர் ஹெல்மெட் அணியாமல் பைக்கை ஓட்டிச் செல்வதால், அவருக்கு அபராதம் விதிக்க முடியாமல் குஜராத் போலீசார் தவித்து வருகின்றனர். குஜராத் மாநிலம் சோட்டா உதய்பூர் மாவட்டம் போடெலி டவுனைச் சேர்ந்த பழ கடை உரிமையாளர் ஜாகிர் மாமோன் என்பவர், தனது இரு சக்கர வாகனத்தை வாங்கியதிலிருந்தே ‘ஹெல்மெட்’ அணியாமல் வாகனத்தை ஓட்டி வருகிறார். இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லும் ஜாகிர் மாமோனை, போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர். அவரிடம், ‘ஏன் ஹெல்மெட் அணியவில்லை’ என்று கேட்கின்றனர். அப்போது ஜாகிர் மாமோன் அமைதியாக இருக்கிறார். காரணம் ஜாகிர் மாமோனின் தலையானது, ஹெல்மெட்டை காட்டிலும் பெரிதாக இருக்கிறது. அதை பார்த்ததும் போலீசாருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்கள் தங்களது தலையை சொறிந்து கொண்டிருந்தனர். மேலும் அருகில் உள்ள கடைக்கு சென்று வெவ்வேறு ஹெல்மெட்டுகளை வாங்கிக் கொடுத்து அவரை அணிய சொன்னார்கள்.
ஆனால் எந்த ஹெல்மெட்டும் அவருக்கு பொருந்தவில்லை. காரணம் பெரும்பாலான ஹெல்மெட்டுகள் ஒரே அளவில்தான் உள்ளன. ஜாகிர் மெமோனின் தலையில் பொருந்தக் கூடிய அளவிலான ெபரிய ஹெல்மெட் எங்கும் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி ஜாகிர் ெமமோனுக்கு எவ்வித அபராதமும் விதிக்காமல், அவரை போலீசார் அனுமதித்தனர். இந்த வீடியோவிற்கு பல்வேறு தரப்பினரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் ஜாகிர் மெமோனின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர், மார்கெட்டில் பெரிய சைஸ் ஹெல்மெட் வரவேண்டும் என்றும், மேலும் சிலர் இன்னும் எத்தனை நாளைக்கு ஹெல்மெட் அணியாமல் இவர் பயணிப்பார் என்றும் கேட்டுள்ளனர்.