இறைவனின் தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “சொர்க்கம் சிரமங்களால் சூழப்பட்டுள்ளது, நரகம் மன இச்சைகளால் சூழப்பட்டுள்ளது.”இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நபிகளார் மேலும் கூறினார்கள்:“இறைவன் சொர்க்கத்தையும் நரகத்தையும் படைத்துவிட்டு, வானவர் தலைவர் ஜிப்ரீலை அழைத்தான். “சொர்க்கத்தையும் சொர்க்கவாசிகளுக்காக நான் தயார் செய்துவைத்துள்ளவற்றையும் பார்த்துவா” என்றான்.அவற்றைப் பார்த்துவிட்டு வந்த ஜிப்ரீல், “இறைவா, உன்மீது ஆணையாக. இதைப் பற்றிக் கேள்விப்படும் யாரும் இதனுள் நுழைவதற்கு முயற்சி செய்வார்கள்” என்றார். அப்போது இறைவன் சிரமங்களால் சொர்க்கத்தை சூழச் செய்யுமாறு உத்தரவிட்டான். அவ்வாறே செய்யப்பட்டது.இறைவன் மீண்டும் ஜிப்ரீலை அழைத்து, “நீ இப்போது சொர்க்கம் சென்று சொர்க்கவாசிகளுக்காக நான் தயார் செய்து வைத்துள்ளவற்றைப் பார்வையிடு” என்றார்.
அவ்வாறே ஜிப்ரீல் அவர்கள் அதைப் பார்வையிட்டபோது, சொர்க்கம் சிரமங்களால் சூழப்பட்டிருப்பதைக் கண்டார். இறைவனிடம் திரும்பி வந்து, “இறைவா, உன் வல்லமையின் மீது ஆணையாக இதில் நுழைவது அவ்வளவு எளிதானதல்ல. யாரும் நுழைய மாட்டார்கள் என்றே அஞ்சுகிறேன்” என்றார்.
பிறகு இறைவன், ஜிப்ரீலிடம், “நீ நரகத்தையும் நரகவாசிகளுக்கு நான் தயாரித்து வைத்துள்ள வேதனைகளையும் பார்த்து வா” என்றார். ஜிப்ரீல் சென்று பார்த்தபோது நரகத்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியின் மீது ஏறிப் பயணித்துக் கொண்டிருந்தது. உடனே அங்கிருந்து திரும்பிய ஜிப்ரீல், “இறைவா, உன் வல்லமையின் மீது ஆணையாக, இந்த நரகத்தில் நுழைந்து விடாமல் இருப்பதற்கே ஒவ்வொருவரும் முயற்சி செய்வார்கள்” என்று கூறினார்.
பிறகு இறைவனின் உத்தரவுப்படி நரகம் மன இச்சைகளால் சூழச்செய்யப்பட்டது. ஜிப்ரீலை மீண்டும் சென்று நரகத்தைப் பார்த்து வரும்படி இறைவன் ஆணையிட்டான். பார்த்துவிட்டுத் திரும்பி வந்த ஜிப்ரீல் அவர்கள், “இறைவா, உன் வல்லமையின் மீது ஆணையாக, இதில் நுழையாமல் யாரும் தப்பிக்க முடியாது என்றே அஞ்சுகிறேன்” என்றார். (ஆதாரம்: திர்மிதி)இறைநம்பிக்கை, இறை வழிபாடு, மனித உரிமைகளை நிறைவேற்றுதல், உறவுகளைப் பேணுதல், நேர்மையுடன் வாழ்தல், மோசடி இல்லாமல் வணிகம் செய்தல் போன்ற நற்செயல்களைத் தொடர்ந்து செய்வது சிரமமானது. ஆயினும் இத்தகைய சிரமங்களால்தான் சொர்க்கம் சூழ்ந்துள்ளது. அதாவது, இத்தகைய நற்செயல்களில் ஈடுபட்டு வாழ்ந்தால் சொர்க்கம் உறுதி.
இதற்கு நேர் எதிரானது நரகம். இறைநிராகரிப்பு, பொய், பித்தலாட்டம், மது, உல்லாசம், விபச்சாரம், ஏமாற்று, மோசடி போன்றவற்றிலும் மனம் விரும்பும் இச்சைகளில் ஈடுபடுவதும் மிக எளிது. இத்தகைய இச்சைகளால்தான் நரகம் சூழப்பட்டுள்ளது. அதாவது எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்பவர்களுக்கு நரகம் உறுதி.இறைவன் நம்மை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்க்கத்தில் நுழையச் செய்வானாக.
– சிராஜுல் ஹஸன்