காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனம் திடீரென பழுதாகி சாலையில் நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிப்பட்டனர். சென்னையில் இருந்து இன்று காலை 10 மணி அளவில் வேலூர் நோக்கி கனரக வாகனம் ஒன்று சென்றது. திடீரென அந்த வாகனம் பழுதாகி நடுரோட்டில் நின்றது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வேடல் பகுதியில் இருந்து சென்னை செல்லும் சாலை, வேலூர் செல்லும் சாலைகளில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதுகுறித்து தகவலறிந்ததும் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பழுதாகி நின்ற கனரக வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.