சேலம்: வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் தமிழகத்தில் 30 சதவீத லாரிகளுக்கு லோடு கிடைக்காமல் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று உரிமையாளர்கள் தெரிவித்தனர். இந்தியா முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகிறது. இந்த லாரிகளுக்கு தானியங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், இரும்பு பொருட்கள், சிமென்ட் என பல வகையில் லோடுகள் கிடைக்கிறது. சரக்குகள் கையாளுவது மூலம் நாள் ஒன்றுக்கு பல கோடி மதிப்பில் லாரி உரிமையாளர்களுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. சுங்கக்கட்டணம், வணிகவரி, டீசல், லாரிகளுக்கு தேவையான தளவாட பொருட்கள் மூலம் பல கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. சமீப காலமாக டீசல், சுங்கக்கட்டணம், லாரிகளுக்கான பொருட்கள் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதை குறைக்க வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் பல கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் ஒன்றிய அரசு எதற்கும் செவி சாய்க்கவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம் உள்பட பல வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வட மாநிலங்களில் பெரும்பாலான தொழிற்சாலைகள், தொழில்நிறுவனங்கள் சரிவர செயல்படவில்லை. மேலும் அங்கு விவசாய பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தை சேர்ந்த லாரிகளுக்கு சரிவர லோடு கிடைக்காமல் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலத்தை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் கூறியதாவது: தமிழகத்தில் 4 லட்சத்து 75 ஆயிரம் லாரிகள் இயங்குகிறது. இத்தொழிலை நம்பி டிரைவர், கிளினீர், ஸ்பேர் பார்ட்ஸ் கடை, ஆயில், டயர் கடைகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என லட்சக்கணக்கானோர் உள்ளனர். லாரி தொழில் பாதித்தால் அதை சேர்ந்த உபதொழில் அனைத்தும் பாதிக்கும். மகாராஷ்டிராவில் இருந்து பெரிய வெங்காயம், பூண்டு, கொண்டைக்கடலையும், மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து துவரை, உளுந்து, பச்சைபயிர், குஜராத்தில் இருந்து மசாலா பொருட்களும் தமிழகத்திற்கு லாரிகள் மூலம் வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு குஜராத்தில் புயல் தாக்கியது. இதன் காரணமாக அங்கு சாகுபடி செய்திருந்த பயிர் வகைகள் மழைநீரில் மூழ்கியது. கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு சில தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன.
பல மாவட்டங்களில் சாலைகள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய லோடுகளின் எண்ணிக்கை 30 முதல் 40 சதவீதம் வரை சரிந்துள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய ஜவ்வரிசி, மஞ்சள், கல்மாவு, கயிறு பண்டல், அரிசி, வெல்லம், எலக்ட்ரானிக் பொருட்கள், எலக்டிரிக்கல் பொருட்கள், சின்டெக்ஸ் டேங்க், நூல் பண்டல் உள்ளிட்டவைகள் செல்லவில்லை. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் லோடு கிடைக்காமல் 30 சதவீத லாரிகள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் டிரைவர், கிளீனர், சுமை தூக்குவோர் போதிய வருமானம் இல்லாமல் உள்ளனர். அதேபோல் லாரி உரிமையாளர்களுக்கும் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.