ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்த கன மழை காரணமாக வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் வன விலங்குகளின் குடிநீர் பற்றாக்குறை நீங்கியுள்ளது. நீலகிாி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு புலிகள் மட்டுமின்றி யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை, பல்வேறு வகையான மான்கள் மற்றும் பல்வேறு வகை பறவைகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இது தவிர தேக்கு மற்றும் ஈட்டி மரங்கள் அதிகளவு உள்ளன. வன விலங்குகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக மாயாறு விளங்குகிறது.
இதற்கு அடுத்தபடியாக அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள கேம்ஹட், ஒம்பெட்டா ஏரிகள் உள்ளன. இதுதவிர புலிகள் காப்பக வனப்பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் உள்ளன. கடந்த ஜூன் மாத இறுதி வரை முதுமலை வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் குறைந்த அளவு தண்ணீர் இருந்தது. இந்நிலையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பந்தலூர், கூடலூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. மழை காரணமாக முதுமலை வனப்பகுதியில் பசுமை திரும்பியது. இடம்பெயர்ந்த வன விலங்குகளும் மீண்டும் முதுமலை வனப்பகுதிக்கு திரும்பியது. தற்போது மாயாற்றில் தண்ணீர் வரத்து உள்ளது.
இதேபோல் கேம்ஹட், ஓம்பெட்டா ஏரி உட்பட சிறு குளங்கள், குட்டைகள் என அனைத்திலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் வன விலங்குகளின் குடிநீர் பற்றாகுறை நீங்கியுள்ளது. இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் கூறுகையில், ‘மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. வரும் காலங்களில் வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுபாடு இருக்காது. வடகிழக்கு பருவமழையும் நன்கு பெய்யும் பட்சத்தில் நீர்நிலைகள் முழுமையாக நிரம்ப வாய்ப்புள்ளது என்றனர்.