கோவை: கோவை, நீலகிரி மாவட்டத்தில் கன மழை நீடிக்கிறது. ஊட்டி, குந்தா, குன்னூர் பகுதிகளில் 20 இடங்களில் மண் சரிவு, 43 மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அணைகள் நிரம்புவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை கொட்ட தொடங்கியது. விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை நேற்றும் நீடித்தது. இதனால் முக்கிய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இன்றும், நாளையும் கோவைக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக வால்பாறை சின்னக்கல்லாரில் 21.3 செமீ மழையும், சிறுவாணி அடிவாரத்தில் 12.8 செமீ மழையும், சின்கோனாவில் 12.4 செமீ மழையும் பதிவானது.
தொடர் மழையால் மாவட்டத்தின் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் நேற்று அதிகாலை 97 அடியை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி நேற்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 16,140 கன அடி நீர் நான்கு மதகுகளின் வழியாக பவானி ஆற்றின் வழியே திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்திலும் கன மழை நீடித்தது. நேற்று அதிகபட்சமாக அவலாஞ்சியில் 35 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அப்பர் பவானியில் 29.8 செ.மீ, ஊட்டியில் 7 செ.மீ, நடுவட்டத்தில் 8 செ.மீ, கிளன்மார்கனில் 10.5 செ.மீ,, குந்தாவில் 11.5 செ.மீ, கூடலூர் 15.3 செ., பந்தலூர் 13.7 செ.மீ. மழை பதிவானது. மழை காரணமாக சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் இன்றும் (27ம் தேதி) கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தொட்டபெட்டா, பைன் பாரஸ்ட், லேம்ஸ் ராக், அவலாஞ்சி, 9வது மைல் சூட்டிங் பாயிண்ட், ஊட்டி படகு இல்லம், பைக்காரா, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ஊசிமலை, ரோஜா பூங்கா ஆகிய அனைத்து சுற்றுலா தலங்களும் தற்காலிகமாக மூடப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் மாலை முதலே குந்தா அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. தொடர்ந்து, நள்ளிரவு அணை நிரம்பியது. இதைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி 2 மதகுகளும் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதையொட்டி குந்தா ஆற்றின் கரையோரத்தில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஊட்டி அருகே பெம்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது. சுமார் 50 அடி நீளத்திற்கு இந்த மண் மரிவு ஏற்பட்டது. இதனால், இவ்வழித்தடத்தில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஊட்டி-மஞ்சூர் சாலையில் காந்திப்பேட்டை பகுதி, ஊட்டியில் இருந்து உல்லத்தி கிராமத்திற்கு செல்லும் சாலை, புதுமந்து செல்லும் சாலை, ஜல்லிக்குழி செல்லும் சாலையிலும், கேத்தி காவல் நிலையம் மீதும், மேரிஸ் ஹில் பகுதியில் வீட்டின் மீதும் மரம் விழுந்தது. கோடப்பமந்து செல்லும் சாலையில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. மஞ்சூர் அருகே கிண்ணக்கொரை சாலையில் ராட்சத மரங்கள் விழுந்தன.
சேரனூர் பகுதியில் டிரான்ஸ்பார்மர் மீது ராட்சத மரம் விழுந்தது. பல பகுதிகளில் மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. சேரனூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் 2 நாட்களாக மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. குன்னூர் அருகே சாலையில் மரம் விழுந்து மின் விநியோகம் தடைபட்டது. பந்தலூர் அருகே தேவாலா அட்டி பகுதியில் கன மழை காரணமாக வேலு என்பவரின் வீட்டின் அருகே மண் சரிவு ஏற்பட்டது. இதனால் வீடு அந்தரத்தில் தொங்கியது. பாறை விழுந்தது: ஊட்டியில் இருந்து மசினகுடி செல்லும் சாலையில், கல்லட்டி சோதனைச்சாவடி அருகே பாறை ஒன்று விழுந்து சாலை பழுதடைந்துள்ள நிலையில், நேற்று மாலை முதல் இவ்வழிதடத்தில் வாகனங்கள் செல்ல காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களில் நேற்று காலை வரை ஊட்டி வட்டத்தில் 11 மரங்கள், குந்தா வட்டத்தில் 13 மரங்கள் உட்பட மொத்தம் 43 மரங்கள் விழுந்துள்ளன.
பலத்த காற்று காரணமாக கூடலூர் பகுதியில் 300 வாழை மரங்கள் சேதம் அடைந்தன. 20 இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. 4 வீடுகள் சேதமடைந்துள்ளன. மரம் முறிந்து விழுந்ததில் கேரளாவை சேர்ந்த சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருப்பூர்: திருப்பூரில் கடந்த 2 நாட்களாக காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. நேற்று பகல் முழுவதும் சாரல் மழை பெய்தது. மழையின் காரணமாக சாலையோர கடை வியாபாரிகள் பாதிப்படைந்தனர். உடுமலை அருகே திருமூர்த்தி மலை மீது அமணலிங்கேஸ்வரர் கோயில் மற்றும் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் விடிய, விடிய கனமழை பெய்ததால் பஞ்சலிங்க அருவியில் நேற்று அதிகாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியில் கொட்டிய தண்ணீர் பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடியது. அமணலிங்கேஸ்வரர் கோயிலை சுற்றிலும் நீர்மட்டம் அதிகரிக்க துவங்கியதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.
நேற்று வைகாசி மாத அமாவாசை என்பதால் பாலாற்றில் குளித்து அமணலிங்கேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்ய அதிகாலையிலே ஏராளமான பக்தர்கள் திருமூர்த்தி மலைக்கு வந்திருந்தனர். வெள்ளப்பெருக்கு காரணமாக பக்தர்கள் கோயிலில் சாமி கும்பிடவும், அருவியில் குளிக்கவும் அனுமதிக்கப்படவில்லை. கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கு செல்லும் பிரதான கோசன் சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மரத்தின் கிளைகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து சீரானது. குமரியிலும் தொடர் மழை: குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக மாவட்டத்தில் 22 வீடுகள் இடிந்து விழுந்தும், 185 மின் கம்பங்கள் உடைந்தும் சேதம் அடைந்துள்ளன.22.59 ஹெக்டர் பரப்பில் வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற மழையின் காரணமாக ரப்பர் பால்வெட்டும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.