சென்னை: தமிழகத்தில் தற்போது வெப்பம் நிலவினாலும் 8ம் தேதி அந்தமான் கடல் பகுதியில் புதிய வளிமண்டல காற்று சுழற்சி உருவாக உள்ளதால் 11ம் தேதி வரை பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்யும். அதற்கு பிறகு 16ம் தேதி வரையும் தீவிர தென்மேற்கு பருவமழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்று மழை பெய்ய வாய்ப்பில்லை என்றபடி ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னை காசிமேட்டில் ஒரு மிமீ தான் மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 10 மிமீக்குள் மழை பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஆங்காங்கே மழை பெய்துள்ளது. இ்ன்றும் நாளையும் குறிப்பிடும்படியாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை. ஓரிரு இடங்களில் தூறல் மழை பெய்யும்.
இருப்பினும் 8ம் தேதி அந்தமான் பகுதியில் வளி மண்டலத்தில் உருவாகும் காற்று சுழற்சி மேலடுக்கு சுழற்சி மிக மெல்ல ஒடிசா- வடக்கு ஆந்திர பகுதியில் நகர்ந்து வந்து தென்மேற்கு பருவ காற்றை வட மேற்கு திசையில் வந்து குவிக்கும். அதாவது, மேற்கு திசை காற்றும் வட மேற்கு காற்றும் இணைந்து மாலையில் வட கடலோர பகுதியில் கனமழையாக பெய்யும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரி மற்றும் காஞ்சிபுரம் ராணிப்பேட்டை திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் தொடங்கி ஆந்திர எல்லையோரம் வரையில் மாலை நேரங்களில் கனமழை பெய்யும். திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும். இதற்கு காரணம் வட மேற்கு காற்று வங்கக்கடல் நோக்கி ஈர்க்கப்படுவதால் ஏற்படும்.
வட மேற்கு வெப்ப நீராவி தமிழகத்தில் குவிய, மேற்கு திசையில் இருந்து கணவாய் பகுதி வழியாக குளிர்விக்கும் காற்றும் அதிலுள்ள நீராவியை மேல் எழுப்பி மழை பொழிவை கொடுக்கும். இந்த இணைவு 8ம் தேதி நிகழும் நிலையில், புதுச்சேரிக்கு வடக்கே நிலை கொண்டாலும் 9ம் தேதி டெல்டாவுக்கும் அனைத்து உள் மாவட்டங்களுக்கும், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கோவை, கரூர், திருச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, கடலூர், அரியலூர் பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில் ஆங்காங்கே நல்ல மழை பெய்யும். அதன் தொடர்ச்சியாக 10ம் தேதி தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களிலும், கர்நாடக, ஆந்திரா, கேரள எல்லையோரங்களில் நல்ல மழை பெய்யும்.
மேலும் 11ம் தேதி மாலை, இரவில் இடி மின்னலுடன் மழை பெய்து தமிழகத்தை குளிர்விக்க உள்ளது. தரைப்பகுதியில் வெப்பம் உயர்வதன் காரணமாக வட மேற்கு திசையில் இருந்து தமிழகம் மற்றும் வங்கக் கடல் வழியாக காற்று சுழற்சி செல்ல இருப்பதால் இடி மின்னலுடன் மழை பெய்யும். மழைக்கு முன்னதாக பலத்த காற்றும் வீசும்.
8ம் தேதி முதல் 11ம் தேதி மாலை, இரவு, நள்ளிரவு என படிப்படியாக மழை உயர்ந்து கொண்டே செல்லும். குறிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் பெய்யும் வய்ப்புள்ளது. அதற்கு பிறகு தென் மேற்கு பருவமழை தீவிரமடையும். 12ம் தேதி தொடர் மழைப்பொழிவாக இருக்கும் வாய்ப்புள்ளது. இது 16ம் தேதி வரை நீடிக்கும். இந்த நாட்கள் தென்மேற்கு பருவமழையாக பெய்யும்.