காஞ்சிபுரம்: பெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக சேதமடைந்த காஞ்சிபுரம் நெடுஞ்சாலைகளை அத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் சீரமைக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக அதிக கனமழை பெய்து வந்தது. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக கனமழை பெய்ததால், நீர்நிலைகள் முழுவதும் நிரம்பி வருகிறது.
தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாநகராட்சி சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. இப்புகாரின்பேரில், காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலை துறையினர், மழை ஓய்ந்த நிலையில் காஞ்சிபுரம் சங்கர மடம் சாலை, தாமல்வார் தெரு, வள்ளல் பச்சையப்பன் தெரு, காஞ்சிபுரம் வந்தவாசி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை, நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் மூலம், பெக்லைன் இயந்திரங்கள் கொண்டு சீரமைத்தனர். மேலும், பல்வேறு பகுதிகளில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மாநில சாலையோர மழைநீர் வடிகால்வாய் பகுதியில் தேங்கியுள்ள கழிவுகளையும் அகற்றி சீரமைக்கப்பட்டது.