திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை வெள்ளத்தில் மூழ்கி அக்கா, தம்பி, அண்ணன், தம்பி பலியாகினர். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை மேல்சிலம்படி, வண்ணாங்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ்(32) விவசாயி. இவரது மனைவி ஐஸ்வர்யா(30), மகள் சுபாஷினி(8), மகன் சூர்யபிரகாஷ்(5). இவருக்கு சொந்தமான நிலத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட பண்ணை குட்டை உள்ளது. நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது.
இதில் பண்ணை குட்டை முழுவதும் நிரம்பி வெள்ளத்தில் மூழ்கியது. நேற்று காலை அங்கு சென்ற சுபாஷினியும் சூர்யபிரகாசும் குட்டையில் விளையாடுவதற்காக இறங்கினர். அப்போது தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடிச் சென்று சேற்றில் புதைந்த இருவரையும் சடலமாக மீட்டனர். இதைபார்த்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஜவ்வாதுமலை அடிவாரத்தில் துரிஞ்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன், கூலித்தொழிலாளி.
இவரது மனைவி நந்தினி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு சென்று வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களது மகன்கள் கதிரேசன்(6), அகிலேஷ்(5) ஆகிய இருவரும் நேற்றுமுன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது ஜவ்வாதுமலை மற்றும் சுற்றுபுற பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக 32 ஓடைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து, குப்பநத்தம் அணை நிரம்பி, ஆற்றில் அதிகளவு வெள்ளம் சென்று கொண்டிருந்தது. திடீரென பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிக்கி கதிரேசன், அகிலேஷ் இருவரும் அடித்து செல்லப்பட்டனர். நேற்று அதிகாலை ஆற்றின் கரையோரம் அகிலேஷின் சடலமும், மதியம் 1 மணியளவில் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள தொட்டிமடுவு கிராம ஆற்றுப்பகுதி கரையோரம் கதிரேசன் சடலமும் மீட்கப்பட்டது.
* பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் குழந்தைகளுடன் விழுந்த பெண்கள்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மெயின் சாலை, வெம்பக்கோட்டை சாலை ஆகியவற்றை அகலப்படுத்தும் பணி கடந்த 2 மாதமாக நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் இருபுறமும் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. கனமழை காரணமாக பள்ளத்தில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. நேற்று முன்தினம் மாலை சாத்தூர் மெயின்சாலையில் மதுரை பேருந்து நிறுத்தம் அருகே 3 பெண்கள் கையில் குழந்தைகளை தூக்கியபடி வந்தனர். மறுபுறம் செல்வதற்காக சாலையை கடந்தபோது பள்ளத்தில் இருந்த தண்ணீரில் கைக்குழந்தைகளுடன் விழுந்தனர். அப்பகுதியினர் அவர்களை மீட்டனர். இந்த வீடியோ வைரலானதால் நெடுஞ்சாலை துறையினர் வந்து ஜல்லிகளை போட்டு பள்ளங்களை மூடினர்.
* மரம் முறிந்து விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு, நீலகிரி, கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டம் வால்பாறை ஷேக்கல்முடி எஸ்டேட்டில், தோட்டத் தொழிலாளி முத்துக்குமார் (44), நேற்று காலை மகன் முகிலனை (4) அங்கன்வாடியில் விடுவதற்காக தோளில் தூக்கியபடி சென்றார். மகள் சுபஸ்ரீ (13)யும் உடன் சென்றார். அப்போது பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் சவுக்கு மரம் முறிந்து முத்துக்குமார், முகிலன் மீது விழுந்து அமுக்கியது. இதில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். படுகாயமடைந்த முத்துக்குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது. வரட்டு பள்ளம் அணைப்பகுதியில் இருந்து தாமரைக்கரை வரை உள்ள மலைப்பாதை ரோட்டில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் பாறைகள் ரோட்டில் உருண்டு விழுந்தன.