சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இன்று வட தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், சென்னை விமான நிலையத்தில் 9 வருகை விமானங்கள், 10 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 19 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்றும், அடுத்த 2 நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் எனவும், வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன் மூலம் வங்கக்கடலை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்யும். பருவமழை காலங்களில் புயல்கள் உருவாகி மழைப்பொழிவை கொடுக்கும்.
அந்த வகையில், தற்போது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதாவது கடல் பரப்பில் வெப்பம் அதிகரிக்கும்போது, நீர் ஆவியாகி மேகமாக மாறுகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் இது தொடர்ந்து நடக்கும் பட்சத்தில் அந்த இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது.
கடலில் வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிக நீராவி இருக்கும், எனவே இந்த பகுதியை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் பயணித்து மேகங்களை அதிகமாக சேர்த்து புயலாக உருவாகிறது. இதனால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை முதல் மிக மிக கனமழை பெய்யும்.