கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் இன்று காலை முதலே பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் படகு சவாரி தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர வடிவிலான ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் 2 இடங்கள், நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒரு இடத்தில் படகு குழாம் அமைக்கப்பட்டு பல வகையான படகுகள் இயக்கப்படுகின்றன. கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்யும் நிலை உள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக தடை செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தந்த நிலையில் ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்ய முடியாமலும், ஏரியில் படகு சவாரி செய்ய முடியாமலும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். படகுகள் இயங்காததால் நட்சத்திர ஏரி வெறிச்சோடியது. மேலும் கோடை விழாவையொட்டி இன்று நடக்க இருந்த படகு போட்டி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.