சென்னை: தற்போது தமிழகத்தில் வெப்பம் நிலவினாலும் 8ம் தேதி அந்தமான் கடல் பகுதியில் புதிய வளிமண்டல காற்று சுழற்சி உருவாக உள்ளதால் தமிழகத்தில் 11ம் தேதி வரை பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வட மேற்கு திசையில் நகர்ந்து சில நாட்களில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், 9ம் தேதியில் இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் கூடிய மழையும் பெய்யும்.
10ம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மேற்கண்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக 11ம் தேதி தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 12ம் தேதியில் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.