சென்னை: வட மேற்கு திசையில் இருந்து கேரளா வழியாக தமிழகத்தில் நுழையும் காற்றின் காரணமாக நாளை முதல் கேரள எல்லையோரம் தொடங்கி வட கடலோரம் வரையில் தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடமேற்கு திசையில் நகர உள்ளது. ஏற்கனவே உள்ள காற்று சுழற்சியுடன் இது இணைப்பு பெற்று வட மாநிலங்களில் அனேக இடங்களில் மழையாக பெய்ய தொடங்கியுள்ளது. இது பரப்பில் விரியும் போது, காற்று குவியும் இடம் மற்றும் கரையேறும் பகுதி என்று பார்த்தால் மகராஷ்டிரா பகுதியில் இருக்கிறது.
இந்நிலையில் வடமேற்கு திசையில் இருந்து கேரளா வழியாக காற்று நுழைய உள்ளது. 2ம் தேதி (நாளை) முதல் மாலை இரவில் வெப்ப சலன மழை பெய்யும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. இது தீவிரமாக பெய்யும் என்றும் எதிர்பார்க்கலாம். இந்த மழை 8ம் தேதி வரை பெய்யும். ஈரோடு, குடியாத்தம் பகுதியில் உறுதியாக பெய்யும். வட கடலோர மாவட்டங்கள் உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும். ஆந்திர எல்லையோரத்திலும் மழை பெய்யும். மேலும், கேரள எல்லையோரம் தொடங்கி வடகடலோரம் பகுதியில் மழை பெய்யும். இவ்வாறு வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வெப்பச் சலன மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் சில இடங்களிலும் லேசான மழை பெய்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக நீலகிரி, கரூர், திண்டுக்கல் வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை நேற்று அதிகரித்து காணப்பட்டது. மேலும், சென்னை, ஈரோடு, மதுரை, திருவள்ளூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்று முதல் 6ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. 2ம் தேதி (நாளை) வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும், ஒரு சில இடங்களில் சற்று உயரக்கூடும். சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி முதல் 102 டிகிரி வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.