சென்னை: தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை மேற்கு வங்காள – வங்கதேச கடலோர பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வங்காளம் – வங்கதேசம் கடற்கரை பகுதிகளில், சாகர் தீவுகளுக்கும்- கேபுபாராவிற்கும் (வங்கதேசம்) இடையே நேற்று முன்தினம் மதியம் கரையை கடந்தது.
இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் இன்று மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.