திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை காலத்தில் கேரளாவில் மழை இல்லாத நாளே இருக்காது. ஆனால், கேரளாவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் மழை இல்லாமல் வறண்ட வானிலை நிலவியது. மேலும் கோடைக் காலம் போல வெயில் சுட்டெரித்தது.
இந்நிலையில் தற்போது கேரளாவில் காலநிலை மெதுவாக மாறி வருகிறது. கடந்த சில தினங்களாக திருவனந்தபுரம், கொல்லம் உள்பட சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு கேரளாவில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழையுடன் பலத்த காற்று மற்றும் இடி மின்னலும் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.