காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நேற்று மாலை திடீரென இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காஞ்சிபுரத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வந்தது. கோடையில் வெயில் உக்கிரமாக இருக்கும் அக்னி நட்சத்திரக் காலம் (மே4ம்தேதி) தொடங்கிய நிலையில், கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வந்ததால் பொதுமக்கள் தவித்து வந்தனர். நண்பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் பொதுமக்கள், வீடுகளிலேயே இருந்தனர்.
இந்நிலையில், வழக்கம்போல் நேற்று காலையும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியத்திற்கு மேல் மாலை 5 மணியளவில் லேசாக காற்றுடன் மேகமூட்டம் சூழ்ந்தது. இதனைத்தொடர்ந்து இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் தொடங்கிய நிலையில், வெயிலின் உக்கிரத்தால் தவித்த மக்கள் திடீரென பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். பாலுசெட்டிசத்திரம், விஷார், பெரும்பாக்கம், முசரவாக்கம், அய்யங்கார்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்த இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.