அகமதாபாத்: குஜராத்தில் கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அணைகள் நிரம்புவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மாலை 6 மணி வரையிலான 12 மணி நேரத்தில் 76 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதனால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்துக்காக அனைத்து சுரங்கப்பாதைகளும் மூடப்பட்டுள்ளன.
சர்தார் சரோவர் அணையில் இருந்து நர்மதை ஆற்றிற்கு அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால், சர்தார் சரோவர் அணையின் (எஸ்எஸ்டி) 30 கதவுகளில் 23 கதவுகள் திறக்கப்பட்டு, 5.5 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த 9,613 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். பல கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
பஞ்சமஹால், தாஹோத், கெடா, ஆரவல்லி, மஹிசாகர், பனஸ்கந்தா மற்றும் சபர்கந்தா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிகக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கண்ட மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையும் விடுத்துள்ளது. கனமழை காரணமாக அகமதாபாத் கோட்டத்திற்கு உட்பட்ட சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. நர்மதா ஆற்றுப் பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.