சென்னை: வட கிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமடைந்து பெய்து வருகிற நிலையில் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும், கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழ்நாட்டில் கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 8ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.