*போலீசார் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், திம்மாபுரம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து ஏற்படும் முன்பு, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திம்மாபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் உள்பட பஸ்கள், கார்கள் என ஏராளமான வாகனங்கள் வடமாநிலங்களில் இருந்தும், பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் இருந்தும் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலத்திற்கு செல்கின்றன.
இதனால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளது. இச்சாலையில் காவேரிப்பட்டணத்திற்கு முன்பாக உள்ள திம்மாபுரம் கிராமத்தின் அருகே, தேசிய நெடுஞ்சாலையையொட்டி அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி இயங்கி வருகிறது. மேலும், இந்த பகுதியில் சாலையோரத்தில் ஏராளமான மீன் கடைகள் உள்ளன. இந்த சாலையையொட்டி அவதானப்பட்டி ஏரியில் இருந்து திம்மாபுரம் ஏரிக்கு செல்லும் கால்வாய் அமைந்துள்ளது.
இந்த சாலையில் காவேரிப்பட்டணம் ஊருக்கு வருவதற்கான சர்வீஸ் சாலை பிரிகிறது. போக்குவரத்து மிகுந்த இந்த பகுதியில், ஏராளமான வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் நிறுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு வாகனங்களை நிறுத்தும் வாகன ஓட்டிகள், மீன் மற்றும் உணவு சாப்பிடவும், அருகில் உள்ள கால்வாயில் குளிக்கவும் சென்று வருகின்றனர்.
இதனால் ஒவ்வொரு வாகனமும் சுமார் ஒரு மணி நேரமாவது நிறுத்தப்படுகிறது. இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களால் பஸ், வேன்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. சில நேரங்களில் விபத்துகளும் நடக்கின்றன.
குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள், கார் ஓட்டுனர்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள், கிருஷ்ணகிரியில் இருந்து திம்மாபுரம் செல்லவும், காவேரிப்பட்டணம் செல்லவும் வேகமாக திருப்பும் போது, அங்கு நின்றுள்ள கனரக வாகனங்கள் மீது மோதும் அபாயம் உள்ளது. எனவே, திம்மாபுரத்தில் சர்வீஸ் சாலை செல்லும் இடத்தில், போக்குவரத்துக்கு இடையூறாக கனரக வாகனங்களை நிறுத்துவதை தடுக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து காவேரிப்பட்டணம் வரும் மக்கள், திம்மாபுரம் அருகில் சர்வீஸ் சாலையில் வருகிறார்கள். இந்த சர்வீஸ் சாலையில் எந்த நேரமும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
எனவே, இந்த பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்தாத வகையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து பல முறை மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளோம். எனவே, பொதுமக்கள் நலன் கருதியும், பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பும், இப்பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்துவதை தடுத்து நிறுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.