அந்தியூர் : ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப் பகுதி கர்நாடகா மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.இந்த பர்கூர் மலை பாதை வழியாக ஈரோடு,கோவை,திருப்பூரில் இருந்து அதிக அளவு கனரக வாகனங்கள் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் மற்றும் மைசூர் பகுதிக்கு சென்று வருகின்றன.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் தாலுக்கா நால்ரோடு முதல் தமிழக எல்லையான கர்கேகண்டி வரை சாலை மிகவும் பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலைக்கு உள்ளானது. மேலும் இந்தப் பழுதான சாலையை மேம்படுத்த கர்நாடக மாநிலத்தில் போராட்டங்களும் நடைபெற்றன.
இதன் காரணமாக அப்பகுதி சாலையைப் புனரமைக்க கர்நாடக அரசு முடிவு செய்து நிதி ஒதுக்கியதையடுத்து, அப்பகுதியில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. சாலைப் பணிகள் மேற்கொள்வதன் காரணமாக கனரக வாகனங்களை அனுமதிக்க வேண்டாம் என கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், ஈரோடு கலெக்டருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் ஈரோடு கலெக்டர் ராஜகோபால சுன்கரா நேற்று மாலை முதல் அந்தியூர் ,பர்கூர் வழியாக செல்லும் அனைத்து கனரக வாகனங்களையும் செல்லம்பாளையம் வனச்சோதனச் சாவடியில் நிறுத்தி மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்துமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று மாலை அந்தியூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் செல்லம்பாளையம் வனச்சோதனைச் சாவடியில் அறிவிப்பு பலகையை வைக்கப்பட்டது.
மேலும் கனரக வாகன ஓட்டிகளிடம் அந்தியூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி நேற்று மாலை முதல் வரும் ஜூலை 5ம் தேதி வரை 6 சக்கர வாகனத்திற்கு மேல் உள்ள கனரக வாகனங்கள் எதுவும் செல்லக்கூடாது எனவும்,அதனை தங்களது லாரி ஓட்டுனர்களின் வாட்ஸ் அப் குழுக்களில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தினார்.