*விவசாயிகள் மகிழ்ச்சி
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக பெய்த கன மழையால் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. இதனால், தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் தேயிலை விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் சிறு மற்றும் குறு விவசாயிகள் என்பதால், சிறிய அளவிலான தோட்டங்களே வைத்துள்ளனர்.
இவர்கள் நாள் தோறும் தங்களது தேயிலை தோட்டங்களில் பசுந்தேயிலை பறித்து அரசு மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்தே வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர்.
பொதுவாக நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் துவங்கி 2 மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதேபோல், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் தேயிலை மகசூல் அதிகரிக்கும்.
இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை பனி பொழிவு மற்றும் வெயிலின் காரணமாக தேயிலை மகசூல் குறையும். இச்சமயங்களில் தேயிலை மகசூல் குறையும். ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தினமும் மழை பெய்துக் கொண்டிருக்கிறது. இதனால், இப்பகுதிகளில் கோடை காலங்களிலும் தேயிலை மகசூல் கூடுதலாக கிடைக்கிறது. இம்முறை கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய மழை இரு மாதங்களுக்கு மேலாக அவ்வப்போது பெய்து வந்தது. கடந்த மாதம் 24ம் தேதி துவங்கிய மழை தொடர்ந்து ஒரு வாரம் நீடித்தது.
மழை காரணமாக மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து, தென்மேற்கு பருவமழை பெய்தால், தேயிலை மகசூல் மேலும் அதிகரிக்க வாயப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.