காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணியில் முப்படை வீரர்களும் மும்பரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கச், மோர்பி, ஜாம்நகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. குஜராத்தில் கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கி கடந்த 4 நாட்களாக பெய்த கனமழை காரணமாக வதோதரா, துவாரகா, ஜாம்நகர், ராஜ்கோட், போர்பந்தர் உள்ளிட்ட 18 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
மாநிலத்தில் உள்ள 140 நீர்தேக்கங்கள் மற்றும் அணைகள் 24 ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது. அஜூவா நீர்த்தேக்கங்களில் இருந்து விஷ்வாமித்ரா ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் வதோதராவின் சில பகுதிகள் ஆற்றங்கரையோர உள்ள நகரங்கள், கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. விஷ்வாமித்ரா ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக ஆற்றின் கரையை உடைத்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து கட்டடங்கள் மற்றும் சாலைகள் வாகனங்களை மூழ்கடித்ததால் வதோதரா வெள்ளத்தில் சிக்கியது.
துவாரகாவில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் கடந்த 2நாட்களாக சிக்கி தவித்த சுமார் 95 பேரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து இன்னும் பலர் வெளியேற்றப்படாமல் உள்ளனர். இவர்களை மீட்கும் பணியிலும் நிவாரண பணிகளுக்காகவும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தவிர ராணுவம், விமான படை மற்றும் கடலோர காவல் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் உடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி ஒன்றிய அரசு அனைத்து உதவிகளும் செய்து தருவதாக உறுதி அளித்தார்.