புதுடெல்லி: அசாமில் கனமழை காரணமாக 10 ஆறுகளில் அபாய அளவை தாண்டி வௌ்ளம் ஓடுகிறது. வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோராம், அருணாச்சலபிரதேசம், சிக்கிம், மேகாலாயா, திரிபுரா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், நிலச்சரிவுகளும் நடந்துள்ளன. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா, பராக் உள்பட 10 ஆறுகளில் அபாய அளவை தாண்டி வௌ்ள நீர் ஓடுகிறது.
இதனால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “கனமழையால் ஏற்பட்டுள்ள வௌ்ளப்பெருக்கு, நிரம்பி வழியும் ஆறுகளால் ஓடும் தண்ணீர் உள்ளிட்ட காரணங்களால் சாலை, ரயில் மற்றும் படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை, வௌ்ளத்தால் 15 மாவட்டங்களில் உள்ள 78,000 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அசாமில் மட்டும் நிலச்சரிவில் சிக்கி 5 பேரும், வௌ்ளத்தில் அடித்து செல்லப்பட் 3 பேர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்து விட்டனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.