தென்காசி: குற்றால அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு 6வது நாளாக தடை விதிக்கப்பட்டள்ளது. கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து, நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இதனால் காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 5 நாட்களாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் கனமழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால்,
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க 6வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதேபோல் தேனி மாவட்டம் சுருளி வனப்பகுதியில் உள்ள அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு 5வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.