சென்னை: 2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்; மார்ச் 1 முதல் நேற்று வரை இயல்பை விட 17 விழுக்காடு குறைவாக மழை பெய்துள்ளது.
கனமழை எச்சரிக்கை: பேரிடர் மீட்பு படை தயார்
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 296 பேர் அடங்கிய 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. மாநில பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த 10 குழுக்கள் குமரி, கோவை, நெல்லை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
கனமழை: 2.66 கோடி செல்பேசிகளுக்கு எச்சரிக்கை தகவல்
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை இருக்கும் என்பதால் செல்போன் மூலம் எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் உள்ள 2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய 18 மற்றும் 19 ஆகிய 2 நாட்களில் எச்சரிக்கை குறுந்தகவல் அனுப்பப்பட்டது.
437 அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை
கடலோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கு எச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது. பலத்த காற்று, கடல் அலை சீற்றம் குறித்தும் மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்படுகிறது.
தென் கடலோரம்: மணிக்கு 65 கி.மீ. வரை காற்று வீசும்
குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரத்தில் மணிக்கு 40 – 65 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை தேவை: ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்
வரும் 23ம் தேதி வரை கனமழை எச்சரிக்கையை அடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.