கோவை: கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமாரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது. பேச்சிப்பாறை திற்பரப்பு, குலசைபுரம், திருவட்டாறு உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேச்சிப்பாறை அணையின் மறுகால் மதகுகள் ஞாயிற்றுக்கிழமை காலையில் திறக்கப்பட்டு, விநாடிக்கு 532 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டது. பாசனக் கால்வாய் வழியாக 528 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டது.
இங்கிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீா் கோதையாற்றில் கலந்து பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். பேச்சிப்பாறை அணை உபரிநீரால், குழித்துறை தாமிரவருணியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்தது. நீா்நிலைகளில் பொதுமக்கள் குளிக்கவோ, கால்நடைகளைக் குளிப்பாட்டுவதற்காக இறங்கவோ கூடாது என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.