*ஏற்றுமதியும் அதிகரிப்பு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகமாக உள்ளதால் களன்களில் கொப்பரை உலர வைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இதனால், வெளியிடங்களுக்கு ஏற்றுமதியும் அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் தென்னை விவசாயமே அதிகமாக உள்ளது. இதனால், இப்பகுதிகளில் சுமார் 350க்கும் மேற்பட்ட கொப்பரை உலர் களன்கள் உள்ளன. வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும்போது உலர் களன்களில் தொடர்ந்து கொப்பரை உலரவைக்கும் பணி நடக்கிறது.
இங்கு உற்பத்தியாகும் கொப்பரைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தபோது, கொப்பரை உற்பத்தி அதிகமாக காணப்பட்டது.
அதன்பின், கடந்த மே 3வது வாரத்திலிருந்து சுமார் 10 நாட்களுக்கு மேலாக இரவு மற்றும் பகல் நேரங்களில் அடிக்கடி மழை பெய்தது. மழை அவ்வப்போது இருந்ததால், சுற்று வட்டார பகுதிகளில் களன்களில் கொப்பரை உலர வைக்கும் பணி தடைப்பட்டு கொப்பரை உற்பத்தி பாதிக்கப்பட்டது.
வழக்கமாக தினமும் 500 டன் வெளியிடங்களுக்கு ஏற்றுமதியாகும். ஆனால் மழைகாலத்தில் 200 டன்னாக குறைவானது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது. இதைத்தொடர்ந்து, களன்களில் மீண்டும் கொப்பரை உலரவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில், தேங்காய் உற்பத்தி குறைவாக இருந்தாலும், கொப்பரை தேங்காய்க்கு அதிக கிராக்கியால், தேங்காயை உடைத்து காய வைத்து கொப்பரையாக மாற்றி, கொப்பரை உற்பத்தியை விவசாயிகள் அதிகரிக்க செய்து வருகின்றனர்.
இதனால் கடந்த சில நாட்களாக வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் கொப்பரையின் அளவு 300 டன்னாக அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை மீண்டும் வலுக்கும் வரை கொப்பரை உலர வைக்கும் பணி தொடர்ந்திருக்கும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.