கடலூர்: மூன்று வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அடித்துக்கொன்ற தாய் மாமன் மற்றும் தாயை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளிக்கு 35 வயது மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். தொழிலாளிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் மூத்த மகன் மட்டும் அவருடன் இருந்துள்ளார். மற்ற 3 குழந்தைகளையும், மனைவியின் சித்தப்பா மகனான ஜீவா (25) விழுப்புரம் மாவட்டம், திண்டிவனதில் உள்ள தனது வீட்டில் தங்க வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி நள்ளிரவு ஜீவா, சகோதரி கணவரின் உறவினர்களை தொடர்பு கொண்டு, 3 வயது சிறுமி இறந்து விட்டதாகவும், தாயுடன் பஸ்சில் அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து கடலூர் உழவர்சந்தை அருகே இறந்த சிறுமி மற்றும் 2 குழந்தைகளுடன் இருந்த பெண்ணை உறவினர்கள் கண்டுபிடித்தனர்.
இறந்த சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால், கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை அளித்த புகாரின்படி போலீசார் வழக்குப்பதிந்து தனிப்படை அமைத்து விசாரித்தனர். இந்நிலையில் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் திருவண்ணாமலையில் பதுங்கி இருந்த ஜீவாவை நேற்று கைது செய்து கடலூருக்கு அழைத்து வந்தனர். வழியில் இயற்கை உபாதை கழிக்கப்போவதாக கூறியதாக சென்ற ஜீவா, திடீரென பாலத்தில் இருந்து குதித்து தப்ப முயன்றதில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விசாரணையில் சிறுமியின் தாய், அவரது சித்தப்பா மகனுடன் தகாத உறவில் இருந்ததும், சிறுமியை ஜீவா பாலியல் பலாத்காரம் செய்து அடித்து ெகாடூரமாக கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியின் பாலியல் கொடூர கொலையை மூடி மறைக்க உடந்தையாக இருந்ததாக தாயையும் போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட மற்ற 2 குழந்தைகளும் கணவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். பாலியல் தொந்தரவு செய்து 3 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.