சென்னை: செவித்திறன் பாதிக்கப்பட்ட, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட் போன்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: தென் சென்னை எல்லைக்கு உட்பட்ட 18 வயதிற்கு மேற்பட்ட செவித்திறன் பாதிக்கப்பட்ட, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், ஸ்மார்ட் போன்கள் கல்வி பயில்பவர்கள், பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யும் பயனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட உள்ளது.
செவித்திறன் பாதிக்கப்பட்ட, பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட 80%, 100% உள்ள மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் யுடிஐடி அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்ட படிப்பு மற்றும் முதுநிலை பட்டபடிப்பு பயிலும், தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். 18 வயது பூர்த்தி அடைந்த பட்டயபடிப்பு, பாலிடெக்னிக், ஐடிஐ பயிற்சி பெறுபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து அரசு ஊதியம் பெறும் மாற்றுத்திறனாளியாக இருத்தல் கூடாது. அதிகபட்ச வயது வரம்பு 70 ஆகும். எனவே, தென் சென்னையை சார்ந்த தகுதிகள் உடைய மாற்றுத்திறனாளிகள் வருகிற 19ம் தேதிக்குள் இ-சேவை மையம் வாயிலாக https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணைப்பில் மாற்றுத்திறனாளிகள் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.