நன்றி குங்குமம் டாக்டர்உணவே மருந்து‘‘பொதுவாக ஆரோக்கியம் தரும் ஜூஸ் வகைகள் என்றாலே நாம் பழங்களை மட்டுமே நினைக்கிறோம். ஆனால், காய்கறி வகைகளிலும் அதே போல சுவையும், ஆரோக்கியமும் மிகுந்த சுவையான ஜூஸ் தயாரிக்க முடியும்’’ என்கிற டயட்டீஷியன் ஜெயலட்சுமி, நல்ல ஊட்டச்சத்துக்களை வழங்கும் காய்கறி ஜூஸ் வகைகள் தயாரிப்பது பற்றி இங்கே விளக்குகிறார். பிரண்டை ஜூஸ்
செய்முறை : கைப்பிடி அளவு பிரண்டையை எடுத்து தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, நன்கு அலசிய பின் அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர், சிறிதளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைத்த ஜூஸை பின் வடிகட்டி அதில் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து குடிக்கலாம். மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடும் போது பச்சை வாசனை போகும்.பலன்கள் : காலையில் வெறும் வயிற்றில் இந்த பிரண்டை ஜூஸை வாரம் இரண்டு முறை குடித்து வந்தால் உடல் எடை குறையும். பல் ஈறுகளில் ரத்தக்கசிவு பிரச்னை இருந்தால் சரியாகும். அஜீரணக்கோளாறு பிரச்னை உடையவர்களுக்கு பிரண்டை ஜூஸ் மிகச் சிறந்த நிவாரணி. எலும்புகள் பலம் பெறும். மூளை நரம்புகள் வலுப்பெறும். பூசணிக்காய்; ஜூஸ்தேவையான பொருட்கள் : வெண் பூசணிக்காய் – ஒரு கைப்பிடி, உப்பு மற்றும் மிளகு- தேவையான அளவு.செய்முறை : சிறிதளவு வெண் பூசணிக்காய் எடுத்து விதை நீக்கி தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அரைத்த பின் அதில் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து குடிக்கலாம். 100 மிலி அல்லது 150 மிலி அளவு அருந்தினால் போதும். அதிகமாக குடிக்க வேண்டாம். பலன்கள் : பூசணிக்காயானது நீர்ச்சத்து நிறைந்த காய் அது மட்டுமில்லாது குறைந்த அளவு கலோரி உள்ள காய்கறி என்பதால் வாரத்தில் மூன்று நாட்கள் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும். ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தது. அதனால் Chronic disease என்கிற நீண்ட நாள் நோய் உடையவர்களுக்கு நல்லது. வைட்டமின் ஏ அதிகமிருப்பதால் பார்வைக் கோளாறு உள்ளவர்கள் அருந்தி வந்தால் நல்ல பலன் இருக்கும்.வாழைத்தண்டு ஜூஸ்தேவையான பொருட்கள் : வாழைத்தண்டு – ஒரு கைப்பிடி, தயிர் – ஒரு ஸ்பூன், உப்பு மற்றும் மிளகு தேவையான அளவு.செய்முறை : சிறிதளவு வாழைத்தண்டு எடுத்து நறுக்கி நாரெடுத்த பின் அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர், சிறிதளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அரைத்த பின் வடிகட்டி அதில் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து குடிக்கலாம்.பலன்கள் : காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும். வைட்டமின் ஏ அதிகமிருப்பதால் பார்வைக்கோளாறு உள்ளவர்கள் அருந்தி வந்தால் நல்ல பலன் இருக்கும். சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் இதனை அருந்தினால் நல்லது. அல்சர் பிரச்னைக்கு மிகச் சிறந்த நிவாரணி. உடலை குளிமைப்படுத்தும். வாழைத்தண்டில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்திருப்பதால் உடல் உள்ளுறுப்புகளுக்கு மிகவும் சிறந்தது. பரங்கிக்காய் ஜூஸ்தேவையான பொருட்கள் : பரங்கிக்காய் – ஒரு கைப்பிடி, உப்பு மற்றும் மிளகு- தேவையான அளவு.செய்முறை : சிறிதளவு பரங்கிக்காய்எனப்படும் மஞ்சள் பூசணிக்காயை எடுத்து விதை நீக்கி தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அரைத்த பின் அதில் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து குடிக்கலாம். பலன்கள் : காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும். ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தது. வைட்டமின் ஏ சத்து நிறைந்தது. சர்க்கரை நோயாளிகள் இதனை தவிர்க்கலாம்.ஏபிசி ஜூஸ்தேவையான பொருட்கள் : ஆப்பிள் – சில துண்டுகள், பீட்ரூட் – சில துண்டுகள், கேரட் – சில துண்டுகள்.செய்முறை : கைப்பிடி அளவு தோல் சீவி நறுக்கிய ஆப்பிள், கேரட் மற்றும் பீட்ரூட் (மூன்றையும் சமமான அளவில்) எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை (தேவைப்பட்டால்), மற்றும் தேவையான அளவு தண்ணீர்; சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அரைத்த பின் வடிகட்டி குடிக்கலாம். விரும்பினால் காய்ச்சிய பால் அல்லது தேங்காய் பால் கலந்தும் அருந்தலாம். தேவைப்படுகிறவர்கள் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். விரும்பாதவர்கள் சர்க்கரை சேர்க்காமல் அருந்தலாம். காலை 11 மணி வாக்கில் ஏபிசி ஜூஸ் அருந்தினால் வயிறும் நிரம்பி இருக்கும். (எப்போது வேண்டுமானாலும் அருந்தலாம்) தேவையான ஊட்டச்சத்துகளும் நன்கு கிடைப்பதால் ஃப்ரஷ்ஷாக உணர முடியும். எடை குறைப்பில் ஈடுபட்டிருப்பவர்கள், கொலஸ்ட்ரால் பிரச்னை உடையவர்கள் தேங்காய் பால் தவிர்த்து விடுங்கள். பலன்கள் : குறிப்பிட்ட பழம் அல்லது காயை ஜூஸாக அருந்தும்போது குறிப்பிட்ட சில நன்மைகள்தான் கிடைக்கும். இதில் மூன்றுவிதமாக காய், பழங்கள் இருப்பதால் இதனை அருந்தும்போது நிறைய வைட்டமின் மற்றும் மினரல் சத்துகள் அதிகளவில் கிடைக்கும். மேலும் இந்த ஜூஸில் இருக்கும் காய் மற்றும் பழங்கள் சிறப்பான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை என்பதால் பலவீனமானவர்கள் தொடர்ந்து அருந்தி வந்தால் உடல் நல்ல பலம் பெறும். கண்ணைச் சுற்றி உள்ள தசைகள் பலம் பெறும். அதனால் கண்களைச் சுற்றி கருவளையம் மற்றும் கண்ணுக்குக் கீழ் தசைகள் தொங்கி போய் ஒரு பை போல் காணப்படும் இது போன்ற பிரச்னைகள் எல்லாம் சரியாகி விடும். பார்வை கூர்மை பெறும். ஞாபக சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் உள்ளுறுப்புகளுக்கு மிகவும் சிறந்தது.– சக்தி